நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பம் பார்த்து அரசியல் நடத்துகின்றனர்

எதிர்கட்சியினர் அரசாங்கத்துடன் ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுவதற்கு இது உரிய தருணமல்ல. இவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் நாட்டு மக்களை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிடுவதோடு நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்டதென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறையமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தினகரனுக்குத் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்ட நாள் முதல் இன்றுவரையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டிலிருந்து கடுகளவும் விலகவில்லை. சர்வதேச அச்சுறுத்தலென்பது தேசிய ரீதியான பிரச்சினையாகும். இதனை ராஜதந்திரரீதியாக அணுக வேண்டுமென்தே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இதற்காகவே அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கூடாக சர்வதேச விசாரணையை தடுத்து நிறுத்துவதற்கான பிரேரணையை கொண்டுவந்துள்ளோம்.

இப்பிரேரணையை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடிவு செய்தோம் எனவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஏதேனும் தீர்மானத்தினை சுயமாக முன்வைத்தால், அவர் எதேச்சதிகாரத்துடன் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ் சுமத்துகின்றனர். பாராளுமன்றத்திற்கூடாக தீர்மானத்தை நிறைவேற்ற ஜனாதிபதி முனையும் பட்சத்தில் அது வேலைக்காகாதது என தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனரெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வரும் எதிர்க்கட்சியினரின் இலக்குதான் என்ன? அவர்கள் எதனை நிறைவேற்றுவதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பம் பார்த்து தேசிய பிரச்சினையுடன் உள்நாட்டு அரசியல் நடத்துகின்றனர். இவ்வாறு செயற்படுவது ஏன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பது அவசியமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25வது அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையின் தீர்மானம் பக்கச்சார்பானது; நியாயமற்றது; டயஸ்போராக்களின் கருத்துக்களைக் கொண்டு எவ்வித உண்மைத் தகவலுமின்றி மேற்கொள்ளப்பட்டதொன்று என்பதனால் இதனை ஏற்றுக் கொள்ள இயலாது எனத் தெளிவாக விளக்கி கூறியிருந்தார்.

அதே நிலைப்பாட்டில் தான், அரசாங்கம் இன்னமும் உள்ளது. நியாயமில்லாத விசாரணைக் குழுவினை எதற்காக இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்களது அறிக்கையில் எந்தவொரு உண்மைத் தகவலும் இருக்காது என்பதை தெரிந்தே நாம் அவர்களது வருகையை ஆட்சேபிக்கின்றோம். ஆனால் அரசாங்கத்துடன் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டு வரும் எதிர்கட்சியினர் எதற்காக இந்த விசாரணைக்குழுவின் வருகையை ஆதரிக்க முற்படுகின்றனர். இதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டியது அவர்களது கட்டாய பொறுப்பு எனவும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply