G.77 இலங்கையின் உண்மை நிலைமை: உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு
பொலிவியாவில் சர்வதேசத் தலைவர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் உண்மை நிலையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து நாடு துரித அபிவிருத்திகண்டு வருவதைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி முன்னேற்றமடைந்து வரும் நாட்டில் வெளிச் சக்திகள் மனித உரிமை குற்றச்சாட்டை முன்வைத்து நாட்டை மீண்டும் வீழ்ச்சிக்கு உட்படுத்தும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஜீ 77 குழு மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அம்மாநாட்டின்போது சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உருகுவே ஜனாதிபதி ஜோஸ்முஜிகா, கெபோன் பிரதமர் டேனியல் ஒனா ஒண்டோ, இக்வடோர் ஜனாதிபதி டியடோரோ ஒபியெங்க் நியுமா ம்பசாகோ ஆகியோருடனான இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையின் உண்மை நிலையை ஜனாதிபதியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டைத் துண்டாடுவதற்கு பயங்கரவாத யுத்தத்தை மேற்கொண்ட எல்.ரீ.ரீ.ஈ.யினர் அரசியல் தலைவர்கள் சிவில் மக்கள் மற்றும் அதிகாரிகளையும் படுகொலை செய்து பொது சொத்துக்களை அழித்தமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது விளக்கினார்.
பயங்கரவாதிகள் இலங்கையின் ஜனாதிபதியொருவர் இந்தியப் பிரதமர் உட்பட அனைத்து தமிழ் ஜனநாயகத் தலைவர்கள் மற்றும் அனைத்து இன மக்களையும் படுகொலை செய்துள்ளனர். குழந்தைகள் கூட அவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றுள்ளன எனவும் தமது அரசாங்கம் சமாதானப்பேச்சுவார்த்தைக்காக ஒஸ்லோ, ஜெனீவா நகரங்களுக்குச் சென்றதையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர்கள் பிரிவினைவாதத்தைக் கைவிடவில்லை. அதனால் யுத்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க தமது அரசாங்கம் முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் நாடு தற்போது விரைவான அபிவிருத்தி கண்டு வருகிறது. இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேற்றப்பட்டு 12,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் கல்வி சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தமான துறைகள் குறிப்பிட்ட முன்னேற்றம் கண்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் 7.5 வீத வளர்ச்சிகண்டுள்ளதுடன் வடக்கில் அது 22 வீதமாகவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு என்பன நியமிக்கப்பட்டுள்ளன என்ப தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார்.
இத்தகைய முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையிலேயே வெளிச் சக்திகள் மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டை மீண்டும் வீழ்ச்சியுறச் செய்ய முயற்சிக்கின்றன எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் தெளிவுபடுத்தலுக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த சர்வதேச அரச தலைவர்கள் இந்த தெளிவு எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply