ஐ.நா.விசாரணைக்குழு இலங்கை வரக்கூடாது பாராளுமன்றம் அங்கீகாரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 134 மேலதிக வாக்குளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க எம். பிக்கள் 37 பேர் நடுநிலை வகித்ததுடன். ஜே.வி.பி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 33 பேர் சபைக்கு சமுக மளித்திருக்கவில்லை. இ. தொ. கா., ஈ. பி. டி. பி., தேசிய காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்ன ணி, இடதுசாரி கட்சிகள் பிரேர ணைக்கு சார்பாக வாக்களித்தன. அதேநேரம், எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் 95 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பின் போது சபையில் இருந்தபோதும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தது. எனினும், ஜே.வி.பி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளியேறியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது எனவும், இலங்கைக்கு எதிராக நடத்தப்படவுள்ள விசாரணை இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டிற்கும் சமாதானத்துக்கும் பாதகமாக உள்ளதால் நாட்டின் இறைமைக்கும் கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் சவாலாக உள்ளதால் குறிப்பிட்ட விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தி ஆளும் கட்சி எம். பிக்கள் ஒன்பது பேரின் கையொப்பத்துடன் இந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. ஆளுந் தரப்பு சார்பில் ஜானக பண்டார பிரேரணையை சமர்ப்பித்ததோடு,
இதனை ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி வழிமொழிந்தார்.இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிட சர்வதேச சமூகத்திற்க உரிமை கிடையாது என் ஆளும் தரப்பினர் குறிப்பிட்டனர். அரசியல் நோக்கத்திலேயே இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள் நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்யும் சர்வதேச முயற்சியை முறியடிக்க சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கோரினர்.ஆளும் தரப்பு சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதிலளித்து உரையாற்றினார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையானது நேர்மையானதொன்றாக இருக்காது என பதிலளித்து உரையாற்றி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை அமைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் விசாரணை முடிவானது நியாயமானதாக இருக்காது.
இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையில் வடமாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்புபற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதானது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது. புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் அழுத்தங்கள் காரணமாகவே இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன் தற்பொழுது சர்வதேச விசாரணையொன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எமது பிரச்சினையை உள்நாட்டிலேயே பேசித் தீர்க்கவேண்டும். எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுக்கும் அனுமதி வழங்க முடியாது. விசாரணைக்கு முயலும் நாடுகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு வேறு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன என்றார்.அதனைத் தொடர்ந்து எதிர் தரப்பு சார்பில் அநுர குமார திசாநாயக்க, மங்கள சமரவீர எம்.பி ஆகியோர் இந்த பிரேரணைக்கு திருத்தங்கள் முன்வைத்தனர்.
அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மங்கள சமரவீரவின் திருத்தமும் தோற்கடிக்கப்பட்டது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு பெயர் குறிப்பிடப்பட்டு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.தே.க வாக்கெடுப்பின் போது சபையிலிருந்த போதும் நடுநிலைவகித்தது. ஜே.வி.பி உறுப்பினர்கள் வாக்கெடுப்பின்போது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply