சர்வதேச விசாரணையை கோருவது கூட்டமைப்பின் வெட்கம் கெட்ட செயல் : அமைச்சர் டக்ளஸ் 

இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடத்த விரும்புவோர் இன, சமூக முரண்பாட்டு சூழலை வளர்ப்பதற்கே விரும்புகின்றனர். நாட்டில் அமைதிச் சூழல் ஏற்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்பப் போவதில்லையென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார். யுத்த வெற்றிக்கு பாராளு மன்றத்தில் நன்றி தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அதே யுத்தம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று வாதாடுவது வெட்கம்கெட்ட செயல் என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச விசாரணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்களே. அனைத்து மக்களின் பிரதிநிதிகளையும் கொண்ட பாராளுமன்றமே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த விடயத்தை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொண்டதை நான் வரவேற்கின்றேன்.

எங்கே வெடி குண்டு சத்தங்கள் கேட்கின்றனவோ. எங்கே உள்நாட்டு குழப்பங்களும். கலவரங்களும், யுத்தங்களும் நிகழ்கின்றனவோ. அல்லது நமக்கு தேவையான இடங்களில் நாமே திட்டமிட்டு குழப்பங்களை உருவாக்கியும் அங்கெல்லாம் தலையை நீட்டி, தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்டவே சில வெளியுலக நாடுகள் காத்திருக்கின்றன.

இப்போது கூட துரதிஷ்டவசமாக தென்னிலங்கையின் சில பிரதேசங்களில் நடத்திருக்கும் இன, சமூக மக்களுக்கிடையிலான மோதல்கள் சில வெளியுலக நாடுகளின் கழுகுக் கண்களுக்கு விருந்து படைப்பதாகவே அமைந்திருக்கின்றன.

இலங்கை மீதான சர்வதேச விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையே நான் இன்று தொலை தூர நோக்கில் கூறி வைக்க விரும்புகின்றேன்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவான 13 வது திருத்தச்சட்டமே எமது அரசியல் தீர்வின் இலக்கை நோக்கிச் செல்லும் தொடக்கப்புள்ளி என்றும் நாம் வலியுறுத்தியபோது அதை ஏற்க மறுத்தவர்கள் யுத்தமும் அதன் அவலங்களும் இங்கு தொடர்ந்தும் நடக்கவே வழி வகுத்தார்கள். அழிவு யுத்தம் நடக்க துணை போனார்கள். இன்று அவர்களே யுத்தக் குற்றம் குறித்தும், சர்வதேச விசாரணை தேவை என்றும் அரசியல் நாடகம் போடுவது நியாயமா என்று நான் கேட்கின்றேன்.

இதுவரை கிடைத்த சந்தர்ப்பங்களை சுயலாப தமிழ் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தியிருந்தால் இங்கு யுத்தம் நீடித்து சென்றிருக்காது. அழிவுகள் நடப்பதற்கான யுத்த சூழலை தாமே உருவாக்கிவிட்டு இன்று யுத்தக் குற்றம் என்றும் சர்வதேச விசாரணை என்றும் கோருவது வெறும் பகல்வேஷ அரசியல் நாடகமே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply