இலங்கையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ, சரத்குமார் கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, தாக்குதல் நடத்தப்பட்டு வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இதற்கு என் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன். இலங்கையில், மனித உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. சிங்கள மொழி, பவுத்த மதம் தவிர்த்து வேறு எந்த மதத்தின் அடையாளமும், குறிப்பாகத் தமிழ் இனத்தின் அடையாளம் அடியோடு இல்லாமல் ஆக்கப்பட, ராஜபக்சே அரசின் பின்னணியில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகள் குறித்து எந்த விசாரணையும் நடத்த ஐ.நா. மன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாகவே ராஜபக்சே அமைச்சர்கள் கொக்கரிக்கின்றனர்.
எனவே, இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதற்கு பிறகாவது உலகநாடுகள், சிங்கள அரசின் கோர முகத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் புத்த துறவிகளின் தாக்குதலில் 3 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிங்கள வெறியர்களோடு சிங்கள காவல்துறையும் சேர்ந்து இஸ்லாமிய மக்களை தாக்கியுள்ளனர்.
இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ராஜபக்சேயின் தமிழ் இன விரோதப்போக்கை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்திய பிரதமர், இலங்கையிடம் நமது கண்டனத்தை தெரிவிக்கவேண்டும். இது போன்ற இனவெறிச்செயல்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க இலங்கையை அறிவுறுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையை சிங்கள பவுத்த நாடாக மாற்றவே, முதலில் தமிழின அழிப்பையும், இப்போது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் சிங்கள இனவெறி அரசு அழித்தொழிக்கத் தொடங்கியுள்ளது. சிங்கள அரசின் இந்த கொடூர திட்டத்தை, அதன் தமிழின அழித்தலுக்கு ஆதரவு தந்து துணைபோன பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையின் தென்மேற்கு பகுதியிலுள்ள அலுத்காமா, பெருவேலா ஆகிய இடங்களில் இஸ்லாமிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையில் 80-க்கும் அதிகமான இஸ்லாமியர்களே படுகாயமுற்றுள்ளனர்.
சிங்கள பவுத்த இனவாத அரசின் துணையுடன் நடக்கும் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து வரும் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாம் தமிழர் கட்சி சென்னையில் போராட்டத்தை நடத்தப்போகிறது.
இலங்கை அரசின் இப்படிப்பட்ட இனவெறியாட்டங்களை தடுத்த நிறுத்த ஒரே வழி, அந்நாடு நடத்தி முடித்த தமிழின அழித்தலை வெளிக்கொணர ஐ.நா. மனித உரிமை மன்றம் நடத்தவுள்ள பன்னாட்டு விசாரணைக்கு, இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
சிறுபான்மை சமூகப்புரட்சி இயக்கம் நிறுவனத்தலைவர் கா.லியாகத்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் இஸ்லாமிய மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக இலங்கையில் இத்தகைய கொடுமைகள் நடப்பதை ராஜபக்சே அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையின் இத்தகைய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply