இந்திய முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளின் நிலை மோசமானது!
உலக அளவில் அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 1983லிருந்து வந்து வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து பல்வேறு மட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு அவர்கள் இருந்து வந்தும் அவர்கள் நிலையில் பெரும் முன்னேற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள் என்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளின் நிலை மோசமானது; இந்தியாவில் இலங்கை அகதிகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.ஆனால் உயர்கல்வி, பிரஜா உரிமை போன்ற விஷயங்களில் முன்னேற்றம் தேவை என்கிறார் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நிலை குறித்து சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐ.ஓ.எம்) சார்பாக ஒரு கள ஆய்வை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த லண்டனில் வசிக்கும் வழக்கறிஞர் சிதம்பரநாதன் கண்ணமுத்து.
இந்தியாவில் சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக 113 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருவதாகக் குறிப்பிடும் சிதம்பரநாதன், முகாம்களில் வாழ்நிலை மோசமாக இருப்பதாகக் கூறுகிறார்.
முகாம்களுக்கு வெளியே சென்று வருவதில் கட்டுப்பாடுகள், பாதுகாப்புக் காரணங்களால் தூர இடங்களில் வேலை வாய்ப்புக்காகச் சென்றுவர முடியாத நிலை போன்ற பிரச்சினைகளை இவர்கள் சந்திக்கிறார்கள் என்கிறார் அவர்.
மேலும், அகதிகளின் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி வரை மற்ற இந்தியர்களைப் போலவே அரசு செலவில் இலவசமாகப் படித்தாலும், அதற்கு மேல், உயர்கல்வியைத் தொடர பொருளாதார ரீதியில் ஆதரவு இல்லாததால் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
இது தவிர இந்தியர்களைத் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்படாத நிலை ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது, அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் பயண ஆவணம் கிடைப்பதில் இதனால் பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார் அவர்.
ஆனால், இவர்களுக்கு தமிழ்நாடு அரசு, மான்ய உதவித் தொகை மற்றும் ரேஷன் உணவுப் பொருட்கள் ஆகியவைகளைத் தருகின்றது என்றும் அவர் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply