அரசாங்கத்தின் கைக்கூலியாகவே ஜம்இய்யத்துல்உலமா செயற்படுகிறது:அசாத்சாலி
அரசாங்கத்தின் கைக்கூலியாகவும் இன்னொரு முகமாகவும் ஜம்மியத்துல்உல மா செயற்படுகின்றது. அது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்காவிடினும் பரவாயில்லை. நாம் எம் உரிமைக்காக போராடும் போது தடைக்கல்லாக இல்லாமல் இருக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத்சாலி தெரிவித்தார். பேருவளை, அளுத்கம ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் முற்று முழுதாக பொய்யான ஒன்று. உண்மையில் ஜனாதிபதி அங்குள்ள மாவ ட்ட செயலகங்களுக்கு மட்டுமே விஜயம் செய்துள்ளார். மாறாக மக்களை சந்திக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
ஜம்இய்யத்துல்லாவின் கண்டிக்கிளை கண்டியில் ஹர்த்தால் செய்ய வேண்டாம். வர்த்தக நிலையங்களை திறக்குமாறு அறிவித்துள்ளது. இது முஸ்லிம்கள் என்ற வகையில் மிக வெட்கக்கேடான விடயம். ஆயினும் கண்டியில் மக்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். ஜம்இய்யத்துல்உலமா மக்களின் நலன் கருதி எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. மாறாக அரசாங்கத்தின் கூலியாகவே அரசாங்க முகமூடியை அணிந்து கொண்டு செயற்படுகின்றது.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உரிமை இல்லை என்று நினைத்தோம். ஆனால், வட்டரக்க விஜிததேரர் இன்று தாக்கப்பட்டமையை அடுத்து ஒட்டுமொத்த மக்களின் உரிமைக்குரலும் ஒடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இது ஒரு பௌத்த நாடு என்று மார்த்தட்டுபவர்கள் இப்போது தங்கள் முகத்தை எங்கே வைப்பார்கள்? பொதுபலசேனாவின் அடாவடித்தனங்களை இன்றும் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
ஞானசார தேரர் கடந்த 2 வருடங்களாக அரசாங்கத்தையும் கெபினட் மந்திரிகளையும் மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் திட்டுவது மட்டும் அல்லாது மதக் கலவரங்களை நாடளாவிய ரீதியில் நடத்துகின்றார். அவருக்கு எதிராக குரல் கொடுத்தால் வன்முறைகளையும் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விடுகிறார். அவருக்கு எதிராக ஏன் மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இன்று அட்டாளைச்சேனையில் மகஜர் கொடுக்கச் சென்ற அன்ஸிலை இந்த அரசாங்கம் தாக்கியுள்ளது. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நாடளாவிய ரீதியில் நாம் ஹர்த்தாலை அனுஷ்டிக்கின்றோம் என்று அறிவித்ததும் அதனை குழப்புவதற்கான பல்வேறு சதிகள் அரங்கேறின. ஆயினும் ஒற்றுமையாக எம் ஹர்த்தாலை நாம் அமைதியுடன் நடத்தி உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
ஜே.ஆர். ஆட்சியினை போன்று மீண்டும் ஒரு பயங்கர இனக்கலவரத்தை இந்த நாட்டில் ஏற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அத்தோடு விடுதலை புலிகளின் காலத்தைபோல பதற்றமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்படுகின்றது.
பொதுபலசேனா என்கின்ற தீவிரவாத அமைப்பை இதற்காகத்தான் தீனி போட்டு வளர்க்கின்றது. ஆனால், இந்த அரசாங்கத்திற்கான சாவுமணி ஜெனீவாவில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
அளுத்கமவில் பைகளில் கற்களை சேர்த்து வைத்திருந்து அதனை பள்ளிக்குள் இருந்தவர்கள் மீது அடித்து தாக்கியே கலவரத்தினை பொதுபலசேனாவினர் ஆரம்பித்துள்ளனர். இதற்கான வீடியோ காட்சி ஆதாரம் என்னிடம் உள்ளது. இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
நீதி அமைச்சராக இருந்து கொண்டு ஹக்கீம் நீதியை நிலைநாட்டாது இருப்பது வெட்கக்கேடான விடயமாக உள்ளது. ஜனாதிபதிக்கு காக்கா பிடிப்பவராக மட்டுமே அவர் உள்ளார். எல்லாவிதமான வன்முறைகளையும் அரசாங்கம் கட்ட விழ்த்து மக்களை அழிக்கிறது. இதன் எதிரொலி ஜெனீவாவில் கேட்கும் என்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply