இனக்குரோதம், குழப்பம் ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை : அஜித் ரோஹண 

நாட்டில் இன, மத, மொழிகளுக்கிடையே குழப்பம், குரோதம் மற்றும் அசாதாரண நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு இடமளிப்பதில்லையென்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியுடன் இருப்பதாக ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்தார். இலங்கை அரசியலமைப்புக்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ள பொலிஸ் திணைக்களம் நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் அதேநேரம் இனங்களுக் கிடையிலான சமத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை கண்டிப்புடன் கையாள பின்வாங்காது எனவும் அவர் கூறினார்.

பொதுமக்கள். ஆகக்குறைந்தது ஆறு மணித்தியாலங்களுக்குள்ளாயினும் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் அறி யதந்த பின்னர் நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும். எனினும் இந்தச் செயற்பாடுகள் இனங்களுக்கிடையேயான முறுகல் நிலையை உருவாக்கும் விதத்திலோ அல்லது ஊக்குவிக்கும் வகையிலோ அமையக் கூடாது.

இதேவேளை. இவ்வாறான செற்பாடுகளுக்கிடையே மக்களை தூண்டி விடும் வகையிலான கருத்துக்கள். வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும் குற்றமாகுமெனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக் காட்டி னார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடையே இன, மத, குரோதத்தை ஏற்படுத்திய கசப்பான யுகம் மீண்டும் நாட்டில் உருவாக பொலிஸ் திணைக்களம் அனுமதிக்காது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.நாட்டின் சட்ட திட்டங்களையும், மனித உரிமைகளையும் மீறி, இன, மத, மொழிகளுக்கிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உண்டுபண்ணும் வகையில் செயற்படும் எந்தவொரு நபரும் 2007 ஆம் ஆண்டின் 50 வது சட்டத்தின் 03 வது சரத்தின் கீழ் தராதரம் பாராது கைதுசெய்யப்படுவார் எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார். எனவே நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலான இதுபோன்ற செயற்பாடுகளில் பங்கெடுப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை. திட்டமிட்டபடி கொழும்பில் இன்று முஸ்லிம் சமூகத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை நடத்த விருப்பதாக தெரிய வந்துள்ளதென குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர். நாட்டின் அமைதிக்கும் இன, மதங்களுக்கிடையில் எந்தவொரு வகையிலும் குழப்பத்தை உருவாக்காத வகையில் மிகவும் அமைதியான முறையில் அதனை முன்னெடுக்க வேண்டுமென கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்களிடம் வேண்டு கோள் விடுத்திருப்பதாகவும் அந்த வகையில் இன்றைய செயற்பாடுகள் யாவும் மக்களின் இயல்பு வாழ்க்கை யை பாதிக்காத வகையில் சுமுகமாக முன்னெடுக்கப்படுமென நம்புவ தாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனங்களுக்கிடையே பதற்ற நிலையை உருவாக்க காரணமாக இருந்தவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தும் வகையில் விசாரணைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியவற்றின் கீழ் 05 பொலிஸ் குழுக்கள் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்காக தொடர்ந்தும் விசாரணைகளை பல கோணங்களிலும் முடுக்கிவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவங்களுக்கு காரணமாகவிருந்த 57 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 36 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 30 தொடக்கம் 40 வரையிலான சந்தேக நபர்கள் தொடர்ந்தும் பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, உயிரிழப்பு, தீ வைப்பு, அடிதடி, உடைமைகள் சேதம் ஆகியன தொடர்பில் 138 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவங்களில் இரண்டு முஸ்லிம்கள் ஒரு தமிழரென மூவர் உயிரிழந்த அதேவேளை 13 சிங்களவர்களும் 14 முஸ்லிம்களும் 07 பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply