பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும்! இல்லையேல் நான் விலகுவேன் : பாலித தெவரப்பெரும

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தனது பதவியில் இருந்து கட்டாயமாக விலகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் பதவி விலகாது போனால், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தான் பதவியில் இருந்து விலகப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொலிஸார் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவை பயன்படுத்தி நாட்டுக்கு பொய்யான தகவல்களை வழங்க வேண்டாம். அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களின் போது பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.

நாட்டில் சட்டத்தை அமுல்படுத்தவிடாத கண்ணுக்கு புலப்படாத சக்தி ஒன்று உள்ளது.

அந்த சக்தி யார் என்பது குறித்து எனக்கு கேள்வி எழுகிறது.

நாட்டில் இனவாதத்தை தூண்டி, சிங்கள, முஸ்லிம் மக்களிடையிலான ஐக்கியத்தை சிதைத்து, தமது அரசியல் அதிகாரத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என அரசாங்கம் நினைக்குமானால், அது மாயை.

அளுத்கமவில் அண்மையில், பொதுபல சேனா அமைப்புக்கு கூட்டத்தை நடத்த அனுமதியை வழங்கிய நபர்கள் பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும்.

அந்த கூட்டத்தில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இனவாதத்தை தூண்டும் வகையில், வெறிப்பிடித்தவாறு பேசினார்.

பௌத்த சாசனத்தை பாதுகாக்க ஒழுக்கம் இருக்க வேண்டும் என புத்த பகவான் போதித்துள்ளார்.

ஒழுக்கமின்றி, ஒழுக்க கேடான மற்றும் பகையை ஏற்படுத்தும் தோரணையில் ஞானசார தேரர் கூட்டத்தில் கருத்துக்களை வெளியிட்டார்.

கூட்டம் முடிந்து சிறிது நேரத்தில் அளுத்கம பிரதேசத்தில் மோதல்கள் ஏற்பட்டன.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். அந்த நெருப்பில் அரசாங்கம் பெட்ரோலை ஊற்றியது.

நாட்டில் உள்ள சில காவி உடை அணிந்தவர்கள், நாட்டின் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு இனவாதத்தை தூண்டி நாட்டை அழித்து வருகின்றனர். நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ள அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

தயவு செய்து அப்படியான செயல்களை நிறுத்துமாறு தான் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்ததாகவும் பாலித தெவரப்பெரும மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply