சிரியா- ஈராக் எல்லைப் பகுதியை தனிநாடாக அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்

ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 2003–ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினார்கள். அப்போது பெயரளவுக்கு தான் இது செயல்பட்டு வந்தது.

ஆனால் 2006–ம் ஆண்டுக்கு பிறகு இது தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. சிரியா போருக்கு பிறகு இந்த படையில் ஏராளமானோர் சேர்ந்தனர். தற்போது 11 ஆயிரம் பேர் படையில் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கில் போரிட்டு வருகிறார்கள். 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்களுக்கு பின்னணில் 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் பேரை சேர்த்து பெரும் படையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் பாங்கி மற்றும் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த ரூ.12 ஆயிரம் கோடி பணம் இவர்களிடம் உள்ளது. இதை வைத்து பெரும் படையை உருவாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார்.

வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் அறிக்கையை இன்று வெளியிட்ட அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி, வடக்கு சிரியாவில் இருந்து ஈராக்கின் டியாலா மாகாணம் வரை உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், இந்நிலப்பரப்பின் ‘கலிபா’வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்துள்ளார்.

இப்பகுதிக்குள் கலிபாவின் படைகள் நுழைந்த நேரத்தில் இருந்து, முந்தைய ஆட்சியாளர்களின் அதிகாரம் காலாவதியாகி விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் புதிய கலிபாவுக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் அந்த ’ஆடியோ அறிக்கை’ குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய ஆட்சி அமைக்கப்பட்டதால் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (ஐ.எஸ்.ஐ.எஸ்.) என்ற தங்கள் அமைப்பின் பெயர் ’இஸ்லாமிக் ஸ்டேட்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply