பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டியமை தெற்காசிய பிராந்தியத்துக்கே நன்மை :அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானம் மற்றும் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியமையானது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி தெற்காசிய பிராந்தியத்துக்கே நன்மையை ஏற்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பிராந்தியத்துக்கு ஏற்பட்டிருக்கும் நன்மையானது சரியான முறையில் அங்கீகரிக்கப்படவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சமுத்திர விஞ்ஞானம் மற்றும் சுற்றாடல் தொடர்பான சிறப்பு மையமொன்றை அமைப்பது குறித்து கொழும்பில் நடைபெறும் இரண்டுநாள் செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்து சமுத்திர சுற்றயல் நாடுகள் இணைந்து இந்த மையத்தை உருவாக்கவுள்ளன. இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தும் நோக்கில் இரண்டுநாள் செயலமர்வொன்று நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வளங்களைப் பாதுகாத்தல், சமுத்திர விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கற்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடல்வளமென்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மானதொரு பங்காற்றும் காரணியாக மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அண்மைய மாலைதீவு மற்றும் சீஷல்ஸ் விஜயத்தின் போது இது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. வளர்ந்துவரும் நாடுகளில் குறிப்பாக இந்து சமுத்திர நாடுகளில் கடல்சார் பொருளாதாரம் முக்கியமானதொரு விடயம்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பயங்கரவாதம் ஒரு சவாலாக அமைந்திருந்தது. எனினும் இந்த சவால் முறியடிக்கப்பட்ட பின்னர் எமது நாட்டுக்கு மட்டுமன்றி பிராந்திய பொருளாதாரத்துக்கே நன்மையாக அமைந்துள்ளது. சட்டவிரோதமான ஆட்கடத்தல்கள் மற்றும் போதை கடத்தல்களைத் தடுப்பதற்கு இலங்கை கடற்படை சிறப்பான முறையில் செயற்பட்டு வருகிறது. ஆட்கடத்தலை தடுப்பதற்கு அவுஸ்திரேலியாவுடன் இணைந்து முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் குறிப்பிட முடியும்.

கடல்வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்து நாடுகளுக்கும் உள்ளது. சுற்றுலாவின் அபிவிருத்திக்கு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு இந்து சமுத்திர சுற்றயல் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியமானது.

சமுத்திர விஞ்ஞானம் மற்றும் சுற்றாடல் தொடர்பான சிறப்பு மையமொன்றை அமைப்பது தொடர்பான தீர்மானம் பங்களாதேஷில் நடைபெற்ற இந்து சமுத்திர சுற்றயல் நாடுகளின் அமைப்பில் (ஐ.ஓ.ஆர்.ஏ) முன்மொழியப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் பீரிஸ் தனதுரையில் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் மற்றும் கொள்கை ஆய்வு நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த இரண்டு நாள் செயலமர்வில் பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டி ருந்தனர்.

இந்து சமுத்திர சுற்றயல் நாடுகளின் அமைப்பின் (ஐ.ஓ.ஆர்.ஏ) செயலாளர் நாயகம் பாஹிராத், கொள்கை ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சமன் கெலேகம உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply