கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் : கருணாநிதி
கச்சத்தீவு, இந்தியாவின் ஒருபகுதி என அறிவித்து தமிழக மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி சார்பில் எதிர்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஜூலை மாதம் தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில், சுப்ரீம் கோர்டடில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இதற்கு மத்திய அரசு சார்பில் கடந்த பிப்ரவரி 17-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கச்சத்தீவு என்றுமே தமிழகத்துக்கு சொந்தமான பகுதியாக இருந்ததில்லை என்றும், இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதோ, ரத்து செய்வதோ முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் எதிர்பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என்று கருணாநிதி சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று நீதிபதிகள் 4 வார கால அவகாசம் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி தரப்பில் எதிர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கச்சத்தீவில் இந்தியா நிரந்தரமான உரிமை எதுவும் கொண்டாட முடியாது என்று மத்திய அரசு கூறியிருப்பது ஏற்புடையது அல்ல.
கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலயம் 1917-ம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது கச்சத்தீவு தமிழகத்தின் ராமநாதபுரம் ஜமீனை சேர்ந்த பகுதியாக இருந்தது. இந்தத் தீவு, ராமநாதபுரம் மகாராஜா ஜமீனுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க பல ஆவணங்கள் உள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், கச்சத்தீவு ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. இதற்கான சர்வே எண் 1250 என்று 1974-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா மற்றும் சிலோன் (இலங்கை) நாடுகளுக்கிடையே இருந்த பிரச்சினை என்று மத்திய அரசு தவறாகக் குறிப்பிட்டுள்ளது. 1803-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு ராமநாதபுரம் ராஜாவுக்கு இந்தத் தீவுக்கான உரிமையை வழங்கியிருக்கிறது. மத்திய அரசு வரலாற்று பூர்வமாகக் கூறப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு குறித்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது தவறாகும். இது தொடர்பாக இலங்கையும், இந்தியாவும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பானவை.
1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறவில்லை. அரசியல் சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் அங்கீகாரம் பெறவில்லை.
பாக் ஜலசந்தி மற்றும் பாக் வளைகுடாவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதும் அவர்களைக் கைது செய்வதும், அவர்களின் படகுகளை சிறைபிடிப்பதும் அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்றன.
கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் குறித்த சர்ச்சை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. இலங்கை அரசிடம் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
எனவே, கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து தமிழக மீனவர்களுக்கு இந்தப் பகுதியில் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply