அரசியலமைப்புக்கு அமையவே தேர்தல் ஆணையரின் தீர்மானம் : அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா 

மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களில் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அரசியலமைப்புக்கு அமைவாக தேர்தல் ஆணையாளரால் எடுக்கப்படும் முடிவு. இந்த விடயத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கம் மீது சேறுபூசுவதற்கு முயற்சிப்பதாக பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். மாகாணசபைகள் தொடர்பான தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும், மாவட்டத்தின் பரப்பளவு, சனத்தொகை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு மாகாண சபைகளுக்கான ஆசனங்கள் பற்றிய தீர்மானங்களை தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானிப்பார். இது அவருடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அரசியலமைப்புக்கு உட்பட்டதாக எடுக்கப்படும் தீர்மானமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பிலுள்ள பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானமானது எந்தவொரு நபரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவது உறுதியா கியுள்ளது. இதில் எதுவித சந்தேகமும் இல்லை.

மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்ட விடயத்தை பிழையாக அர்த்தம் கற்பித்து அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக் குறித்து போதிய விளக்கம் இல்லாமல் கீழ் மட்டத்தில் இறங்கிவந்து அரசாங்கம் மீது சேறுபூசம் வகையில் அர்த்தப்படுத்தியிருப்பது தமக்கு கவலையை அளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

எமது நாட்டில் தேர்தலை முன்னிட்டு ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது இதுவொன்றும் முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அரசியலமைப்பிற்கமைய தேர்தல் ஆணையாளரினால் ஒரு சில மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இது அனைத்து பிரஜைகளினாலும் எதுவித குளறுபடியுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பதுளை, மொனராகலை மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கையில் செய்யப் பட்ட மாற்றங்களை மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி பெரிதுபடுத்திக் காட்டுவது இம்முறை நடக்கவிருக்கும் தேர்தல் மீது அவர்களுக்குரிய அவநம்பிக்கையினையே எடுத்துக் காட்டுகிறது.

இதனைத் தான் நாம் ‘ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் போன்று’ என கூறுவதுண்டு என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் சட்ட விதிமுறைகளுக்கமைய தமது கட்சியின் வேட்புமனுக்குழு பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply