நேரடிப் பேச்சுக்கு அரசு – TNA தயார் இரு தரப்பும் இணக்கம் தமிழ் மக்கள், புத்திஜிவிகள் வரவேற்பு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்திருப்பதை தமிழ் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் வரவேற்றுள்ளனர். கடந்த காலங்கள் போலல்லாது இத்தடவை இருதரப்பும் இதய சுத்தியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு காலத்தைக் கடத்தாது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதோர் தீர்வினை விரைவாகக் காண வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித் துள்ளனர். இருதரப்பும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதால் பேச்சுவார்த்தைக்கான இடம், திகதி என்பன விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் நாம் பேச்சுவார்த்தைக் கான கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம். இதனை ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி கூறிவருகிறார்.
அதனால் எமக்கு இதுவொரு புதிய விடயமல்ல. தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக் குழுவே எமது முதற் தெரிவாக இருப்பினும் தீர்வினை விரைவாகக் காண வேண்டு மென்பதில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்க் கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசவும் நாம் தயாராகவே உள்ளோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ்க் கூட்டமைப்புடன் இதற்கு முன்னர் அரசாங்கம் நடத்திய சுமார் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதும் நாம் விலகிக் கொள்ளவில்லை, மாறாக தமிழ்க் கூட்டமைப்பே ஏதேதோ காரணங்களைக் கூறித் தாமாகவே விலகிக் கொண்டு ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகள் விட்டன எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை நேரடிப் பேச்சுக்கு தாமும் தயாரென தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்தார்.
அரசாங்கம் அதற்கான முறையான அழைப்பை விடுத்தால் நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தயாராகவே உள்ளோம். இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நீண்டு செல்வதை நாமும் விரும்பவில்லை. எனவே அரசாங்கம் அழைப்பு விடுப்பதை நாம் எதிர்பார்த்துள்ளோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply