சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் ஊழியராக வந்த இந்தியப் பெண்
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் ஊழியராக வந்த இந்தியப் பெண் பிரமிளா ராஜேந்திரன் மாடல் அழகி என தெரிய வந்துள்ளது. அவர் குடும்பத்தினருக்கு கடைசியாக அனுப்பிய குறுந்தகவல் பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் கடந்த 17-ந்தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.17 விமானத்தில் சிப்பந்திகளாக வந்த 15 உறுப்பினர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியினர். அதில் ஒருவரான ஏஞ்சலின் பிரமிளா ராஜேந்திரன் (வயது 30) பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் செல்லப்பிராணிகள் மீது அளவற்ற நேசம் கொண்டவர். தனது பெற்றோருக்கு ஒரே மகள்.
இவர் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் புறப்படுவதற்கு முன் தன் குடும்பத்தினருக்கு கடைசியாக அனுப்பிய குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)- “எனது நாய் லெக்சியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதுதான்.
ஏஞ்சலின் பிரமிளா ராஜேந்திரனின் குடும்பம், மலேசியாவில் புக்கித் டிங்கி என்ற நகரில் வசித்து வருகிறது. அவரது தம்பி மர்பி கோவிந்த் தனது சகோதரி பற்றி கூறியதாவது:-
என் அக்கா பிரமிளா பிராணிகள் மீது பற்று கொண்டவர். நான் அவளை செல்லமாக பிராணிகளின் தாய் என்று தான் சொல்வேன்.
இந்த கோர சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் என் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போனார். தனது படுக்கை அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டவர் வெளியே வரவே இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்தான் என் அக்காவின் பிறந்த நாளை நாங்கள் அனைவரும் கொண்டாடினோம்.
மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தினர் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு போனில் வந்தனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த விமானம் தரை இறங்கவில்லை என்று மட்டும் தகவல் சொன்னார்கள். அதே மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிற எனது நண்பர்தான் நடந்தது என்ன என்பதை சொன்னார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏஞ்சலின் பிரமிளா ராஜேந்திரன், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மாடல் அழகியாகவும் திகழ்ந்தார் என்பது அவரது தோழி ஆன்னட் ரோமன் மூலம் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply