தமிழ்நாட்டில் பிறமொழிகளை படிக்க கட்டாயப்படுத்தக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய மந்திரியும், மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க கூடாது. மொழி திணிப்பை ஏற்க மாட்டேன். ஒவ்வொரு தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மாணவர் அவர் விரும்பிய மொழியில் படிப்பதற்கு முழு உரிமை உள்ளது. எனவே பிறமொழிகளை படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிராக போராடியவர்களில் நானும் ஒருவன்தான். தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் இந்தி மொழி அவசியம் ஆகிறது. நான் இப்போது இந்தி கற்று வருகிறேன். தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தி கற்று வருகிறார்கள்.

எனக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட பலருக்கு இந்தி கற்றுக்கொடுத்து வருவதை நான் நேரில் பார்த்தேன். இந்தியை வெறுப்பவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுவதாக நான் கருதுகிறேன். ஆனால் மொழி திணிப்பு கூடாது.

பிரதமர் நரேந்திரமோடி எந்த மாநிலத்துக்கும் சாதகமாக நடந்து கொள்ள மாட்டார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடுநிலையாக உள்ளதால் தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை கேரளா 142 அடி உயர்த்த மோடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழக நலனில் அக்கறை செலுத்தி வருகிறது.

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டநாள் கோரிக்கையான சென்னை ராயபுரம் 3-வது முனையத்துக்கான ஆய்வுப்பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கொங்கு மண்டல பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதி வளர்ச்சியிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே விருப்பம் போல் செயல்பட்டார். ஆனால் இப்போது ராஜபக்சே, தமிழர்களை விருப்பம்போல் ஆட்டிப்படைக்க பாரதீய ஜனதா அரசு அனுமதிக்காது. சில நாடுகளில் நடைபெறும் போர் விவகாரத்தில் மதரீதியான முடிவுகளை எடுக் காமல், நாட்டின் வளர்ச்சி அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு செயல்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply