20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பம்

20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இன்று ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிகள் உதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி வரை ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெறும். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்71 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்து 500 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி ஸ்கொட்லாந்து நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.இதன் ஆரம்ப நிகழ்வு மிகவும் கோலாகலமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதனை உலகெங்கிலும் உள்ள 150 கோடி மக்கள் பார்த்து இரசிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுநல விளையாட்டு விழாவை 28 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்பை ஸ்கொட்லாந்து பெற்றுள்ளது.
பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இவ் விழா ஸ்கொட்லாந்தில் நடைபெறுவது இது மூன்றாவது தடவையாகும். 12 தினங்கள் நீடிக்கும் இவ் விளையாட்டு விழாவில் 261 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கையைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளும் அதிகாரிகளும் கட்டம் கட்டமாக க்ளாஸ்கோ சென்றடைந்துள்ளனர். அதேபோன்று மற்றைய நாடுகளினதும் வீர. வீராங்கனைகள், அதிகாரிகள் ஆகியோர் இன்றைய ஆரம்பவிழாவுக்காக காத்திருக்கின்றனர். இன்று நடைபெறும் ஆரம்ப விழா அணிவகுப்பின்போது இலங்கை அணித் தலைவரும் மல்ய+த்த வீரருமான அன்டன் சுதேஷ் பீரிஸ் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார்.

இன்று மாலை நடைபெறவுள்ள ஆரம்ப விழாவில் 40,000 பார்வையாளர்கள் முன்னிலையில் ஸ்கொட்லாந்தில் பிரபல்யம்பெற்ற ரொட் ஸ்டுவர்ட், சுசான் பொய்ல், அமி மெக்டொனல்ட் போன்றவர்கள் இசை விருந்தளிக்கவுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன.

இவ் வருட பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 13 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 99 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 வகையான போட்டிகளில் ஐவர் பங்குபற்றுகின்றனர்.
அத்துடன் இலங்கை சார்பாக பயிற்றுநர்கள், முகாமையாளர்கள், அதிகாரிகள் அடங்கலாக 44 அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர். இம் முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ,லங்கைக்கு பளுதூக்குதல், குத்துச்சண்டை, மெய்வல்லுநர் ஆகிய போட்டிளில் பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கிளாஸ்கோ நகரம், இதுவரை காணாத மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துமென சேர் கிறிஸ் ஹோய் தெரிவித்துள்ளார்.
சேர் கிறிஸ், ஸ்கொட்லாந்தின் சார்பில் ஆறு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று இருதடவைகள் பொதுநலவாய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தவர். அவர் பொதுநலவாய போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகளுக்கு முன்னர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply