வவுனியா கல்வாரியில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டதுக்கு சிறி ரெலோ கண்டனம்
இறை வழிபாட்டின் அல்லது இறை நம்பிக்கையின் மூல காரணமாக விளங்குகின்ற உருவச்சிலைகளை உடைப்பதும் சேதப்படுத்துவதும் அந்தந்த மதப் பிரிவினரை துன்பத்தில் ஆழ்த்துவது மட்டுமன்றி இருக்கின்ற அழுத்தங்களுடன் இதுவும் இணைந்து வன்முறையினை உருவாக்கவும் காரணமாகி விடும். வவுனியா கோமரசங்குளம் கல்வாரி சிலைகளை உடைத்த செயலானது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன் இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானது என சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமான ப.உதயராசா விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே வருமாறு,
மனிதர்கள் மீது கருணைகாட்டி பாவச்செயல்களில் நாட்டம் கொள்ளாமல் மனிதத் தன்மையினை பேண வேண்டும் என்பதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன.
இன்றைய சூழலில் தமிழ் இனம் பொருளாதார பின்னடைவு, கலாச்சார சீரழிவு, வேலையில்லாப் பிரச்சனை, கடன் சுமை என கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்ற வேளையிலும் தமிழர் பண்பாடுகளில் ஒன்றான மத நம்பிக்கையே அவர்களை கட்டுப்படுத்தி பாதுகாத்து வருகின்றது.
“எல்லாம் இறைவன் பாத்துக் கொண்டிருக்கிறான்” என தங்களை தாங்களே ஆறுதல்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அந்த இறை வழிபாட்டின் அல்லது இறை நம்பிக்கையின் மூல காரணமாக விளங்குகின்ற உருவச்சிலைகளை உடைப்பதும் சேதப்படுத்துவதும் அந்தந்த மதப்பிரிவினரை துன்பத்தில் ஆழ்த்துவது மட்டுமன்றி இருக்கின்ற அழுத்தங்களுடன் இதுவும் இணைந்து வன்முறையினை உருவாக்கவும் காரணமாகி விடும்.
இதனை உணராது நேற்றையதினம் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி சிலைகளை சில விசமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் மட்டுமல்லாது இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானது.
ஒருசிலர் மேற்கொள்கின்ற இவ்வாறான தவறான நடவடிக்கைகளினால் அவர்கள் சார்ந்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதன் மூலம் தாங்கள் சார்ந்த மதத்திற்கோ, சமூகத்திற்கோ துரோகம் இழைத்து விடுகின்றனர்.
எனவே குற்றவாளிகள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தனிமைப்படுத்தி இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெற இடமளிக்காது பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமையாகும்.
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதே எமது இனத்தை வளர்சிப்பாதையில் இட்டுச்செல்லும். அதுவே எதிர்காலத்தில் எமது அபிலாசைகளை அடைய வழிவகுக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply