தமிழக மீனவர்களின் தஞ்சமடையும் நேற்றைய போராட்டம் கைவிடப்பட்டது
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு அமைய தஞ்சமடையும் போராட்டத்தைக் கைவிட்டனர் தமிழக மீனவர்கள். இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் தமது குடும்பங்களுடன் கச்சதீவில் சரணடைவது என்று தீர்மானித்திருந்தனர். இதன்படி நேற்று காலை அவர்கள் இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு ஊர்வலமாக சென்று அங்கிருந்து கச்சத்தீவுக்குப் படகுகளில் செல்ல ஆயத்தமாகினர். இதன் போது தொலைபேசியில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், பத்து நாட்களுக்குள் மீனவர் பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேசி உரிய தீர்வு பெற்றுத் தரப்படும். அத்துடன் மீனவர்களது பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வு எட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். அமைச்சரின் தொலைபேசி மூலமான கோரிக்கை அங்கு திரண்டிருந்த மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் பத்து நாட்களுக்குள் தீர்வு பெற்றுத் தரப்படுமாயின் நேற்றுத் தாம் இந்தப் போராட்டத்தைக் கைவிடுகின்றனர் என்றும் உரிய தீர்வு பெற்றுத் தரப்படாவிட்டால் முழு அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர். இதேவேளை புதுக்கோட்டை மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்றுக் கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply