ஜெ., – மோடி பற்றி வெளியான கட்டுரைக்கு ராஜபக் ஷே…வருத்தம் விசாரணைக்கு உத்தரவிட்டு அறிக்கை கேட்கிறார்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவதுாறாக சித்தரித்து, இலங்கை ராணுவ இணையதளம் வெளியிட்ட செய்திக்கு, அந்நாட்டின் அதிபர், ராஜபக் ஷே நேற்று வருத்தம் தெரிவித்துள்ளார். ”அதற்காக நான் வருந்துகிறேன்; அது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்,” என, அவர் கூறினார்.இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால், இந்திய மீனவர்கள், குறிப்பாக, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டி, தமிழக முதல்வர், ஜெயலலிதா, அடிக்கடி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.
அதுபோல, பல ஆண்டு களுக்கு முன், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட, ராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும், ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார். முக்கியமாக, 2009ல், இலங்கையில் நடைபெற்ற, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது, இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டித்தும், அவை போர்க் குற்றங்கள் எனவும், தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது.
ராணுவ இணையதளம்: இதனால், இலங்கை அரசுக்கும், அந்நாட்டினருக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை, அந்நாட்டின் ராணுவ இணையதளம், சில நாட்களுக்கு முன் வெளிப்படுத்தியது.
‘பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களால், எந்த அளவுக்கு பலன் கிடைக்கும்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், கேலிச் சித்திரங்களும் இடம் பெற்றிருந்தன.இதை அறிந்த தமிழக கட்சிகளான, அ.தி.மு.க., – தி.மு.க., – பா.ம.க., – ம.தி.மு.க., போன்றவையும், இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் மற்றும் இலங்கை விமான நிறுவன அலுவலகம் முன் கூடி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதை அறிந்த இலங்கை ராணுவம், கட்டுரை வெளியான அன்றே, அதை, தன் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டது. உடனே, ‘மன்னிக்க வேண்டுகிறோம்’ என்ற தலைப்பில், நடந்த செயலுக்காக, அந்நாட்டின் ராணுவம் மன்னிப்பு கேட்டது.மேலும், அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர், கபிலா ஹெண்டவிதாரணா, ‘இணையதளத்தில் வெளியான கட்டுரை, முறையான ஒப்புதல் இன்றி, அரசு நிர்வாகத்திற்கு தெரியாமல் வெளியாகி விட்டது. அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்’ என்றார்.
இந்த விவகாரத்தை அப்படியே விடக் கூடாது; இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர், ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பார்லிமென்டில் இந்த விவகாரத்தை எழுப்பி, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறிக்கை:இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு அதிபர், சுதந்திரா கட்சியை சேர்ந்த, ராஜபக் ஷே, ”தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி குறித்து வெளியான கட்டுரைக்காக நான் வருந்துகிறேன். எந்த சூழ்நிலையில் அது வெளியானது என்பது குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுள்ளேன்,” என்றார்.
துாதரிடம் கண்டிப்பு:இந்தியாவுக்கான இலங்கை துாதர் (ஐ – கமிஷனர்), சுதர்ஷன் சேனாவிரத்னேயை, வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அழைத்த வெளியுறவுத்துறை, அவரிடம், இந்தியாவின் கடும் கண்டனத்தை தெரிவித்தது.அப்போது, அந்த சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானதை அடுத்து, பார்லிமென்டில் ஏற்பட்ட அமளி, மக்களின் கோபம் போன்றவற்றை இலங்கை துாதரிடம் தெரிவித்த மத்திய அரசு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவும் செய்தது.
மனித உரிமைக்கு எதிர்ப்பு:இலங்கையில், 2009ல் நடைபெற்ற இறுதிப் போரின் போது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்தும், அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் அமைத்துள்ள, சர்வதேச விசாரணை குழுவுக்கு, இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக மூன்று வல்லுனர்கள்:”இலங்கையில், 1990 முதல் 2009 வரை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள, மூன்று சர்வதேச வல்லுனர்களுடன் கூடுதலாக மூன்று வல்லுனர்கள் இணைக்கப்படுவர்,” என, அதிபர் ராஜபக் ஷே நேற்று கூறினார்.
இந்த சர்வதேச வல்லுனர் குழு, விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இலங்கை ராணுவத்தினர் மற்றும் இலங்கை மக்களைப் பற்றியும் கண்டறிவர் என்பதால் கூடுதலாக மூன்று வல்லுனர்களை இணைக்க அதிபர் முன்வந்துள்ளார்.ஆனால், இதற்கு அவரின் இரண்டு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘சர்வதேச அமைப்புகள் விரித்த வலையில், அதிபர் வீழ்ந்து விட்டார்; இதனால், இலங்கைக்கும், அரசுக்கும் பாதிப்பு ஏற்படும்’ என, ஜே.எச்.யு., மற்றும் என்.எப்.எப்., கட்சிகள் தெரிவித்துள்ளன. இரண்டு பிரிட்டன் மற்றும் ஒரு அமெரிக்கரை கொண்ட இந்த சர்வதேச வல்லுனர் குழு, இதுவரை, காணாமல் போனவர்கள் பற்றிய, 19 ஆயிரம் புகார்களை பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply