இலங்கையர் என்ற உணர்வை வளர்த்து இனங்களை ஒற்றுமைப்படுத்துவோம் அர்ப்பணிப்புடன் பெற்ற சமாதானத்தை இழக்க முடியாது
பெரும் இன்னல் களுக்கும், பல்வேறு தியாகங்களுக்கும் மத்தியில் நாம் பெற்ற இன்றைய சமாதானம் சுதந்திர த்தை எம்மால் இழக்க முடியாது. “இலங்கையர்கள்” என்ற உணர்வை நாம் வளர்க்க வேண்டும். நிச்சயமற்ற கடினமான சூழல் மீண்டும் உருவாக நாம் இடமளிக்கக் கூடாதென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். “நாட்டில் பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் இனங்கள் இல்லை. நாட்டை நேசிப்பவர்களும் நாட்டை நேசிக்காதவர்களுமே உள்ளனர்” ஜனாதிபதியின் இந்தக் கூற்று மனங்களில் ஆழப் பதிய வேண்டும்.ஜனாதிபதியின் சமாதான அபிவிருத்தி முயற்சிகளுக்கு நாம் பங்களிப்பு நல்க வில்லையானால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாழாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கம், புரிந்துணர்வு மன்றம் வெளியிட்ட “ஒரே நாடு – ஒரே மக்கள்” என்ற சிறுநூலின் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி செயலர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் சங். பேராசிரியர் கும்புறுகமுவே வஜிரநாயக்க தேரர் முன்னாள் சபாநாயகர் எம். எச். முஹம்மத் ஆகியோரின் தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இவ் விழா நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, காலையில் வேலைக்கு வருபவர் மாலையில் திரும்பி வருவாரா? என்ற பயங்கர நிலைமை அன்று நிலவியது. எமக்கு முன்னால் நடந்து வருபவர் எம்மை என்ன செய்வாரோ? என்ற பீதியான சூழலே காணப்பட்டது. நாட்டை இரண்டாகப்பிரிக்க ஆரம்பம் முதல் நமது ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் வந்தன. உலக நாடுகளும் வேறு சக்திகளும் கொடுத்த இந்த அழுத்தங்களை ஜனாதிபதி துச்சமாக மதித்து தமது உயரிய இலட்சியத்தில் வெற்றி கண்டார்.
அதனால் தான் நாம் இன்று அச்சம் நீங்கி சமாதான வாழ்வை மேற் கொள்கிறோம். இது இனங்களுக்கு இடையிலான யுத்தம் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனது பாடசாலை வாழ்வை நினைத்து இன்றும் பெருமைப்படுகிறேன். நாம் இன, மத, ரீதியாகப் பிரியாமல் ஒன்றாகக் கற்றோம். பிறரின் பல கலாசாரங்களை நாம் நன்கு மதித்தோம். சிறு சிறு பிரச்சினைகள் பாரிய வன்முறைகளாக வெடித்ததால் முழு இனமும் பிரச்சினைக்கு உள்ளாகலாம்.
1505 ல் வெளிநாடவரின் ஆக்கிரமிப்பில் தொடர்ந்த நிலை 1948 வரை 433 ஆண்டுகள் எம்மை வேறுபடுத்தும் நிர்வாக முறையே இருந்தது. சுதந்திர இலங்கை, ஒரே நாடு என்ற கொள்கையை நாம் வளர்க்க வேண்டும். மொழிப் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 2020 – 2021 ஆண்டுகளுக்குள் நாட்டில் மும்மொழிக் கொள்கை யதார்த்தமாகும். இதில் ஜனாதிபதி மிக ஆர்வமாக உள்ளார்.
“பூகோளப் பிரஜையாக” நம் குழந்தைகளை மாற்றி தேசிய மொழிகளையும் ஆங்கில மொழிகளையும் கற்று நமது பிள்ளைகள் முன்னேற்றம் பெற வேண்டுமென்றே ஜனாதிபதி விரும்புகிறார். பெளத்த – முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்க பாடுபடும் தேசிய நல் இணக்க, புரிந்துணர்வு மன்றத்தின் பணிகளில் இயலுமான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply