இலங்கை, பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர்கள் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு
இலங்கை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களுக்கிடையிலான நான்காம் சுற்று அரசியல் பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின்போது இலங்கை, பாகிஸ்தானிய வெளிவிவகார செயலாளர்களான திருமதி சேனுக்கா செனவிரட்னவும் அயிசாஸ் அஹ்மட் சவுத்ரியும் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், கல்வி, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இம்மாத இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் விஜயம் குறித்து முக்கியமாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களுக் கிடையிலுமான இருதரப்பு சந்திப்புக்கள் கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் குறித்தும் இருநாட்டு செயலாளர்களும் தீர்க்கமாக ஆராய்ந்தனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரு நாடுகளுக்குமிடையில் அரசியல் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட நெருக்கமான நட்புரீதியான உறவு உண்டு என்பதை உணர்ந்தவர்களாக அதனை மென்மேலும் பலப்படுத்து வதற்குரிய வழிமுறைகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
பாகிஸ்தானிய வெளிவிவகார செயலாளருக்கு திருமதி சேனுக்கா செனவிரட்ன, இலங்கையில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் முன்னெடுக் கப்பட்டுள்ள புனர்நிர்மாணம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் உள்ளிட்ட அண்மைக்கால அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கைக்கெதிராக பிரேரணை முன்வைக்கப்பட்ட போது இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளை நன்கு புரிந்து கொண்டவர்களாக பாகிஸ்தான் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு தனது மனப்பூர்வமான பாராட்டுக்களையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் வழங்கினார்.
மேலும் இலங்கையில் முன்னெடுக்கப் பட்டு வரும் புனர்நிர்மாணச் செயற் பாடுகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் முயற்சிகளுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பிலான நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் இலங்கை மாணவர்களுக்கும் இலங்கை இராஜ தந்திரிகளுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத் தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் மற்றும் எமது சுகாதார, இரத்தினக்கல் ஆபரணங்கள் துறையைச் சார்ந்தோருக்கான பயிற்சிகள் குறித்து நன்றி தெரிவித்துக் கொண்ட அதேநேரம், அதனை மேலும் பலப்படுத் துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இரு நாடுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் குறிப்பாக சார்க் திட்ட வரைபுக்குள் பணியாற்றுவது தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது ஒத்துழைப்பினை தொடர்வதற்கும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன.
இயற்கை அனர்த்தங்கள், காலநிலை மாற்றங்கள் தொடர்பில் தங்களது அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்புக் குறித்த ஒப்பந்தமொன்றில் இரு நாடுகளும் கைச்சாத்திடுவதற்கான ஆவணங்களை தயார்படுத்துவதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல், போதைவஸ்து மற்றும் ஆட்கடத்தல், புகலிடக் கோரிக்கையாளர்களது பிரச்சினைகள், குற்றச் செயற்பாடுகள் தொடர் பிலான விவகாரங்களை ஒரேமுறையில் தீர்ப்பது குறித்து இணக்கம் காணப் பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply