பாகிஸ்தானை விட்டு ஓடிவிடமாட்டேன்: முஷரப் பேச்சு

பாகிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008 வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷரப். ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த இவர் மீது, 2007-ல் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முஷரப்புக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசும் தடை விதித்துள்ளது.

ஆனால், ‘நான் பாகிஸ்தானை விட்டு ஓடிவிட மாட்டேன்’ என முஷரப் கூறியுள்ளார். அவரது ‘அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின்’ தொண்டர்களிடையே, நேற்று தொலைபேசி மூலம் அவர் உரையாற்றும்போது, தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டவை என்றும், அடிப்படை ஆதாரமற்றவை என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் பாகிஸ்தானை விட்டு ஒருபோதும் ஓடமாட்டேன். மாறாக என்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். எனினும் நோய்வாய்ப்பட்ட எனது தாயை பார்ப்பதற்காக நான் துபாய்க்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கிருந்து நான் உடனே நாடு திரும்பி விடுவேன்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், செனட் சபையின் தலைவருமான ராஜா ஜபருல் கூறுகையில், ‘முஷரப் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முஷரப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply