குற்றவாளிகளே நீதிபதிகளாக இருக்கின்ற நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியாது : மன்னார் ஆயர்
குற்றவாளிகளே நீதிபதிகளாக இருக்கின்ற ஒரு நாட்டில் நீதி கிடைக்கும் என்றோ சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படுமென்றோ எதிர்பார்க்க முடியாது என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் காணாமல் போனோர் விசாரணைக்குழு தொடர்பாகவும் ஜனாதிபதியவர்களால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு நிபுணர் குழு தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து இது தொடர்பில் கருத்துக் தெரிவிக்கையில்;
இலங்கையில் ஆணைக்குழு விசாரணையென்பது முன்பு பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுபோல காலைக்கடன் கழிப்பது போன்றதாகும். நியமிக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ தமிழ் மக்களுக்கோ நன்மையோ தீர்வோ கிடைக்கப்போவதில்லையென்பதே உண்மையாகும். எல்.எல்.ஆர்சி அறிக்கைக்கு என்ன நடந்தது. பார்க்கவேண்டும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார் மேற்படி அறிக்கையில் 95 வீதத்தை நிறைவேற்றி விட்டோமென்று இந்த அறிக்கையை மறுதலிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். மேற்படி அறிக்கையில்
35 வீதந்தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்று மக்களிடம் கேட்டுப்பார்த்தால் 5 வீதமும் நிறைவேற்றப்படவில்லையெனக் குறிப்பிடுகிறார்கள். வீதிகள் போடப்படுகின்றது வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனால் எல்லாம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று கூற முடியாது. மக்களுக்கு முதன்மைப்பட்ட விடயங்களை அரசு முதல் செய்ய வேண்டும். எல்லாமே கண்துடைப்புத்தான். ஐ.நாடுகள் சபை சர்வதேச விசாரணைக்கு ஆணைக்குழுவை நியமித்துள்ளார்கள் என்ற வீம்புக்காக, அரசாங்கம் ஆணைக்குழுக்களை அடுக்கடுக்காக நியமித்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு நிபுணர்கள் என நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எவ்வகை அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட முடியுமா சுதந்திரமாக என்பது பற்றியெல்லாம் தெளிவுபடுத்தப்படவில்லை.
எனவே, உள்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த முயற்சியும் எங்களுக்கு நன்மை தரப்போவதில்லை.
மாறாக ஏமாற்று வித்தையாகவும் இதய சுத்தியற்றதாகவுமே இருக்கப்போகிறது.
நாட்டிலுள்ள மக்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோமென்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்குரிய எந்த ஆயத்தத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, மக்களையும் அதற்காக ஆயத்தப்படுத்தவில்லை. இராணுவத்தின் பெரும்பகுதி வட பகுதியிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மக்களுடன் ஒன்றுடன் ஒன்று கலக்கும் முயற்சியிலேயே தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் . போர் முடிந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்கள் ஏன் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை?
பிரயோசனமற்று நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தை பயன்படுத்தி உற்பத்திகளைப்பெருக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். வடகிழக்கில் தரிக்க வைத்து மக்களின் அன்றாட வாழ்வை சமநிலையற்றதாக்க முயற்சிக்கக் கூடாது என ஆயர் மேலும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply