இரணைமடு குடிநீர்த்திட்டத்தை அமுல்படுத்துவதில் வடமாகாண சபை இழுத்தடிப்பு; நிதி திரும்பும் அபாயம்
இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை அரசியல் காரணங்களைக் கூறி இழுத்தடிப்புச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இரணைமடுக் குளத்தை புனரமைப்புச் செய்து நீரின் கொள்ளளவை அதிகரித்து வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது காலத்தின் தேவை. வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றிருப்பவர்கள் மேற்படி திட்டத்தை செயற்படுத்தவிரும்பாமலும், செயற்படுத்தத் தெரியாமலும் குடிநீர் விநியோகத்திட்டத்தை இழுத்தடிப்புச் செய்கின்றனர்.
எனவே மேற்படித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி என்றவகையில் விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காணவேண்டும் என ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கச்சேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற யாழ். குடாநாட்டின் வரட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா, மாகாண சபையை பொறுப்பேற்றிருக்கும் கூட்ட மைப்பினர் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் அக்கறை செலுத்தாமல் இந்த நிலை தொடருமாக இருந்தால் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத்திட்டத்துக்கான நிதி திரும்பிவிடக்கூடிய ஆபத்தும் ஏற்படக் கூடுமெனக் கூறினார்.
வழமையை விடவும் வடமாகாணம் பாரிய வரட்சி யினால் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாடு மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் பளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி போன்ற பகுதிகளும் வரட்சி குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது. இவ்விடயத்தில் வடக்கு மாகாண சபையினர் எவ்விதமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் வட மாகாண செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.
எவ்வாறெனினும் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள வரட்சி நெருக்கடிக்கு தீர்வு காண்கின்ற நடவடிக்கையில் பிரதேச செயலாளர்களும், பிரதேச சபை செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த விசேட கூட்டத்தில் அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், மாவட்ட திட்டப் பணிப்பாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர் நீர் வழங் கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply