இலங்கைக்கு அவதூறு ஏற்படுத்தவே நவிப்பிள்ளை தொடர்ந்தும் முயற்சி வெளிவிவகார அமைச்சு அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வெளியிட்டி ருக்கும் கருத்தானது பக்கச்சார்பானது என வெளிவிவகார அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது. “இலங்கைக்குச் செல்லாமலேயே போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ள முடியும்” என நவநீதம் பிள்ளை தொம்சன் ரொய்டர்ஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்தக் கருத்தானது இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணையில் நவநீதம் பிள்ளை பக்கச்சார்பாகச் செயற்படுகிறார் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இம்மாத இறுதியில் பதவியிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் நவநீதம் பிள்ளையின் இந்தக் கருத்தானது இலங்கைக்கு எதிரான விசாரணையில் தாக்கம் செலுத்துவதற்கு முயற்சிப்பதுடன், விசாரணைக்கு முன்னரே முடிவொன்றைக் கூறும் முயற்சி என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.

‘இலங்கைக்கு வெளியே நிறைய தகவல்கள் உள்ளன’ என்று அவர் தனது செவ்வியில் கூறியிருந்தார். இதற்கு முன்னரும் இவை அவர் நம்பகமான தகவல்கள் எனக் கூறியிருந்தார். அத்தவல்களின் உண்மைத் தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலத்தில் இலங்கை தொடர்பில் பக்கச்சார்பான முறையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நடந்துகொண்டமையானது துரதிஷ்டவசமானது.

மோதல்கள் 2009 மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளேயே சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். சர்வதேச பொறிமுறையொன்றைக் கொண்டுவர முன்னர் தேசிய ரீதியில் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையை மீறும் வகையில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதே ஆணையாளரின் நிலைப்பாடு என்பது அப்போதே தெளிவாகத் தெரிந்தது.

தனது இந்த நிகழ்ச்சிநிரலை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அவர் மீண்டும் இலங்கை தொடர்பாக அறிக்கைகளையும், வாய்மொழிமூலமான விளக்கங்களையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனை அறிக்கையில் அவர் இலங்கை தொடர்பாக சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கள் இயற்கையின் நீதியை மீறியவகையில் காணப்பட்டன.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் கருத்து வெளியிடுகையில் “பயங்கரவாதம் என்ற போர்வையில்” இலங்கை பிரச்சினைகளை முன்கொண்டு செல்வதாகக் கூறியிருந்தார். ஏனைய நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவுக்கு எதிரானது என்பது பலநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அவருடைய கருத்தானது ஐ.நா முறையில் கொண்டிருக்கும் நம்பகத் தன்மையை பணயம் வகைக்கும் வகையில் அமைந்திருந்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டு இலங்கையில் விசாரணைகள் நடைபெற்றுவந்த சமயத்தில் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கோரியிருந்தது. இவ்வாறான தனது கருத்துக்கள் மூலம் இலங்கை தொடர்பாக திரிக்கப்பட்ட உணர்வலையொன்றை ஏற்படுத்த நவநீதம்பிள்ளை முயற்சித்திருந்தார். இலங்கையின் சமூக பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாது தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டைக் காண்பிக்கவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ந்தும் முயற்சித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை முறைமையில் இலங்கை தொடர்ந்தும் நம்பிக்கைவைத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்டவற்றில் இணைந்து செயற்பட்டு வருகிறது. மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெறுப்புடனேயே பார்க்கிறார். உள்ளூர் மக்களின் கலாசார பிணைப்புக்களுக்கு மதிப்பளிக்காமல் தண்டனை வழங்கும் நீதியொன்றுக்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராகப் பொறுப்பேற்கவிருக்கும் இளவரசர் செய்ட் ராஆத் செய்ட் அல்ஹ¥சைனி பொதுநிலை கொள்கைகளுக்கு மதிப்பளித்து, அனைவரையும் சமமாக மதித்து, நாடுகளின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply