சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் முதல் முறையாக மோடி தேசிய கொடி ஏற்றுகிறார்

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவது இதுவே முதல் தடவை ஆகும். விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 7.20 மணிக்கு நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகிறார். அவர் வந்ததும் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசுவார்.

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதன் முதலாக ஏராளமான பொதுமக்களும் விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விழாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு ஏற்ப கூடுதல் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

சுதந்திர தின விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். டெல்லி நகருக்குள் வரும் சாலைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

சுதந்திர தினவிழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால் செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

கட்டுப்பாடுகள்

செங்கோட்டை வளாகத்தை சுற்றி ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் போது செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழாவுக்கு வரும் மக்கள் செல்போன், டிரான்சிஸ்டர், டிபன் பாக்ஸ், சிகரெட் லைட்டர் போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.. சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக செங்கோட்டைக்கு வரும் மக்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மாநகர பஸ்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுபோன்ற விழாக்களில் அதிகாரிகள் தயாரித்து கொடுக்கும் உரையை பிரதமர் வாசிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக முக்கிய குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு நரேந்திர மோடி சுதந்திர தின உரை நிகழ்த்த இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

முன்பு பிரதமராக இருந்த சிறந்த பேச்சாளரான வாஜ்பாய் குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு சுதந்திர தின உரை நிகழ்த்தியது உண்டு. அவரைப் போல் நரேந்திர மோடியும் சிறந்த பேச்சாளர் என்பதால் அவரும் குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு பேச இருக்கிறார்.

கூட்டங்களில் ஏற்ற, இறக்கத்துடன் சரளமாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் பேசக்கூடியவர் நரேந்திர மோடி. ஆனால் பிரதமர் ஆன பிறகு சில நிகழ்ச்சிகளில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை அவர் வாசித்தது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றும், மோடியின் பேச்சுத்திறமை அதில் வெளிப்படவில்லை என்றும் அவரிடம் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் முக்கிய குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு அவர் பேச இருப்பதாக தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தனது பேச்சின் போது, ஏழைகளுக்கு நிதி உதவி அளிக்க வகை செய்யும் பெரிய திட்டம் ஒன்றை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய நிதி மந்திரியை தலைவராக கொண்ட இந்த திட்டம் இரு கட்டங்களாக அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக வருகிற 28 அல்லது 29–ந் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த திட்டத்தின்படி, நாட்டில் உள்ள 15 கோடி ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படும். ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்ததாக இந்த வங்கி கணக்கு தொடங்கப்படும். இவர்கள் தங்கள் வங்கி கணக்கு இருப்பில் இருந்து கூடுதலாக (கடன்) ரூ.5 ஆயிரம் எடுத்துக் கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் காப்பீடு வசதியும் கிடைக்கும்.

இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது 5 மட்டங்களில் கண்காணிக்கப்படும். இதில் மத்திய அரசு தரப்பில் 3 மட்டங்களிலும், மாநில அரசின் தரப்பில் 2 கட்டங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் பேருக்கு முறையான வங்கி கணக்கு கிடையாது. இதனால் அவர்கள் பணத்தேவை ஏற்படும் போது கடன் கேட்டு தனியாரிடம் போய் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply