காஷ்மீர் பிரச்சினையில் அமைதி தீர்வுக்கு விருப்பம்: நவாஸ் ஷெரீப் பேச்சு
பதற்றத்தின் ஆதாரமாக திகழ்கிற காஷ்மீர் பிரச்சினையில், அமைதி தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார்.பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறார். அதற்கான முதல் முயற்சியாக, அவர் பதவி ஏற்பு விழாவுக்கு ‘சார்க்’ என்னும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். இரு தரப்பு உறவினை மேம்படுத்துவது தொடர்பாக அவர் மோடியுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினார்.
ஆனால் இன்னொரு பக்கம் எல்லையில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது இரு தரப்பு உறவில் கசப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி 2 தினங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவுடன் நேருக்கு நேர் நின்று போரிட வலிமை இல்லாததால் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபடுகிறது’ என குற்றம் சாட்டினார்.
ஆனால், ‘மோடியின் கருத்துகள் அடிப்படையற்றவை, துரதிர்ஷ்டவசமானவை’ என கூறி பாகிஸ்தான் நிராகரித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பிரச்சினையில் அமைதி தீர்வையே நாங்கள் முழுமையான நேர்மையுடன் விரும்புகிறோம். இதன்மூலம் பதற்றத்தின் முக்கிய ஆதாரத்தைப் போக்கலாம். தங்களது உறவினை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானும், இந்தியாவும் புதிய வழிகளை கண்டறிய வேண்டும்.
எங்கள் நாடு அமைதியான நாடு. நாங்கள் நாட்டில் அமைதி நிலவ முயற்சி செய்கிறோம். எல்லைகளிலும் நீடித்த அமைதி நிலவவே விரும்புகிறோம். அண்டைநாடுகளுடன் அமைதியான உறவை மேம்படுத்துவதே எனது முக்கிய வெளியுறவு கொள்கை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply