தமிழ் இராணுவ வீராங்கனையின் மரணத்துக்கு புற்றுநோயே காரணம்

இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி திருமுருகண்டியைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது 23) என்ற பெண் மரணமடைந்தமைக்கு புற்றுநோயே காரணமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார். இராணுவ வீராங்கனையான பிரசாத் அஜந்தா கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சிகிச்சை பெற்று வந்ததாகவும். இப்புற்றுநோய் உடலுக்குள் பரவி குடலில் தடைகளை ஏற்படுத்தியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக வைத்திய கலாநிதி பவானி பசுபதிராசா மேலும் விளக்கமளித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த டாக்டர் பவானி பசுபதிராசா, அப்பெண்ணின் மரணத்துக்கு வேறெந்தக் காரணமும் கிடையாதெனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இராணுவ வீராங்கனையின் மரணம் குறித்து விளக்கமளித்த இராணுவத்தின் 51 வது பிரிவு கட்டளை அதிகாரி குமுது பெரேரா இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் நல்ல முறையிலேயே நடத்தப்படுவதாகவும் அப்பெண்களுக்கும் கடினமான பயிற்சிகள் எதுவும் வழங்கப்படுவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் பவானி பசுபதிராசா தனது விளக்கத்தில் குறிப்பிட்டதாவது:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி இறந்த இராணுவ வீராங்கனை புற்று நோயினால் இறந்தாரே அன்றி அவருடைய இறப்புக்கு வேறு காரணங்கள் எவையும் இல்லை. செல்வபுரம், திருமுருகண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது 23) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி வாந்தி, வயிறு வீக்கம் போன்ற நோய்களுடன் பலாலி படைத்தளத்தில் உள்ள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் இவருக்கு புற்று நோய் உண்டென்பதை அறிந்து வைத்தியசாலை புற்று நோய் விடுதியில் அனுமதித்து சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இத்துடன் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதையும் அறியக் கூடியதாக இருந்தது. இந்நிலையில் இவருக்கு கருப்பையில் ஏற்பட்ட புற்று நோயானது அதிகரித்து குடலில் தடைகளை ஏற்படுத்தியமையால் மரணம் ஏற்பட்டுள்ளது.

இவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் ஏற்கனவே இவருடைய மரணம் புற்று நோயால் ஏற்பட்டதென குறிப்பிட்ட வைத்தியர் சிபார்சு செய்தமையினால் பிரேத பரிசோதனை செய்யவில்லை.

கட்டளை அதிகாரி குமுது பெரேரா இராணுவ பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட எந்தவொரு தமிழ் பெண்களுக்கும் இராணுவத்தில் கடினமான பயிற்சிகளோ அன்றி துன்புறுத்தல்களோ இடம் பெறவில்லை. எனவும் இவர்கள் நல்ல முறையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு நடத்தப்படுகிறார்கள்.

இதன் போது கருத்துக் கூறிய ஊடக இணைப்பாளர் பிரிகேடியர் ரஞ்சித் மல்லவ ஆராய்ச்சி, இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைவரும் இணைத்துக்கொள்ளப்பட்ட நாளில் இருந்து அவர்கள் இராணுவத்தினராகவே கருதப்படுவர். இவர்களுக்கு வடக்கு, கிழக்கு. தெற்கு என எந்த வகையான வேறுபாடுகளும் கிடையாது. இராணுவத்தினருக்கும் வழங்கப்படும் அனைத்து வசதிகளும் மரணம் அடைந்த அஜந்தாவுக்கு வழங்கப்படும்.

இவர் இராணுவத்தில் இணைக்கப்படும் வேளையில் இவரிடம் முதலாவது படிவம் நிரப்பப்படும் போது நோய்கள் சம்பந்தமாக கேட்டமைக்கு தனக்கு எந்த வகையான நோயும் இல்லையென தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் கண், காது, வாய், கை, கால்கள் போன்றன மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவது வழமையாகும். இவருடைய நோய் அதிகரித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துடன் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டு அவர்களும் வந்து பார்வையிட்டார்கள்.

இறந்த பெண் இராணுவ வீரங்கனை எந்தவொரு கடின பயிற்சிக்கும் உள்ளாக்கப்படவோ துன்புறத்தல்களுக்கு உள்ளாக்கப்படவோ இல்லை.

இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதிக்குப் பொறுப்பாக இருந்த வைத்தியரும் வைத்தியசாலைப் பணிப்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவருடைய மரணத்திற்கான காரணம் புற்று நோயென மரணச்சான்றிதழும் வழங்கியுள்ளார்கள்.

இவருடைய மரணச்சடங்கு இராணுவத்தினரால் இராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளது. இது முதல் தடவையாக வடக்கில் ஒரு தமிழ் இராணுவ வீராங்கனைக்கு இராணுவ மரியாதையாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply