வடக்கு மக்களின் வாக்குகளால் ஆட்சியைப் பிடிக்கும் பகற் கனவில் ரணில் : எஸ்.பி. திசாநாயக்க 

வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறலாம் என்ற பகற்கனவுடனேயே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் என உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். பிரபாகரன் கோரியதையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இக்கோரிக்கையால் உருவான அத்தகையதொரு கொடூரமான யுகம் மீண்டும் உருவாவதை தமிழ் மக்கள் உட்பட எந்த மக்களும் விரும்பப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

‘ரண்பிம’ காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 1971 இல் எமது ஜனாதிபதி அப்போது இளைய பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் தடவையாக காணி உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து 1977 ற்குப் பின்னர் அப்போது ஆட்சியிலிருந்த ஜே. ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரம சிங்க போன்றோர் எமது காணிகளை வெளிநாட்டவர் களுக்கு விற்றனர். 2005 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்து எமது காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதில்லை என்ற தீர்க்கமான கொள்கையை நடைமுறைப்படுத் தினார்.  இதற்கிணங்கவே மக்களுக்கு ‘ரண்பிம’ காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாடு மிக மோசமான காலகட்டமொன்றில் இருந்த போது நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் கட்டயெழுப் பியுள்ளார். உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புகளில் முதலிடத்தில் புலிகள் இருந்ததுடன் வேறு எந்த பயங்கரவாதிகளிடமும் இல்லாத ஆயுதங்கள் நீர் மூழ்கிக் கப்பலுடன் உலகளாவிய வலையமைப்பும் இருந்தது. அரசாங்கத்திடம் கூட நீர் மூழ்கிக் கப்பல் இருக்கவில்லை. விமானப் பலம், கடற் பலம் என பலம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய புலிகள் மதத் தலைவர்களையும் அனைத்து மதத்தினரையும் வகை தொகையில்லாமல் கொன்றனர்.

இந்த கொடூர பயங்கரவாத்தை இல்லாதொழித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அவரது வழிகாட்டலில் இந்த நாட்டின் புத்திரர்களான படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்தனர். நாடு சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்து ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் மீள நாட்டை இயங்கச் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

பல்கலைக் கழகங்கள். தொழில்நுட்பக் கல்லூரிகள். கலாசாலைகள் இயங்கவில்லை. நாட்டில் 22 வீதமாக மந்தபோசனமும் வேலை வாய்ப்பற்ற நிலையும் இருந்தன. மூன்று வீதத்துக்குக் குறைவான அபிவிருத்தியே இடம்பெற்றது. இயங்காதிருந்த நாட்டை மீள இயங்கச் செய்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடையது. யுத்தம் நடந்த போதே நாட்டை அபிவிருத்தி செய்தார். இதற்கு முன் இந்த நாட்டு மக்கள் அதிவேக பாதையைக் கண்டதில்லை. ஜே.ஆர்., பிரேமதாச, சந்திரிகா போன்றோர் அபிவிருத்தி பற்றி பேசினரேயொழிய நடைமுறைப்படுத்தவில்லை.

சிலாபம் கத்தோலிக்கக் குருவானவர் எதிர்ப்பு தெரிவித்ததால் நுரைச்சோலை மின் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. கரு ஜயசூரிய மேல் கொத்மலைத் திட்டத்தை ஆர்பித்த போது அமைச்சர் தொண்டமான் எதிர்த்ததால் அது கைவிடப்பட்டது. அவருக்கு அதனைத் தெளிவுபடுத்த அவர்களால் முடியவில்லை. நாடு இன்று பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அடுத்த மாதம் கண்டி – கொழும்பு அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

உலகில் அபிவிருத்தியில் கடந்த வருடம் சீனா முதலிடத்தில் இருந்தது இரண்டாவது இடத்தில் நமது நாடு இருந்தது ஆடைத் தொழில் துறையின் வரலாற்றில் அதிகூடிய வருமானம் கடந்த வருடத்தில் எமக்குக் கிடைத்துள்ளது. தேவைகள் அதிகரிப்பதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றன. எனினும் அதற்கேற்ப மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று வெல்ல முடியும் என எண்ணிக்கொண்டு செயற்படுகின்றார். வடக்கில் பிரபாகரன் கோரியதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோருகிறது. இதனை மக்கள் விரும்புவார்களா கிழக்கு மக்கள் இதனை ஏர்பார்களா? கப்பம் பெறும் யுகம் தமது பிள்ளைகளை கூட்டிச் சென்று படுகொலை செய்த யுகம் வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி நாடெங்கிலும் குண்டு வெடித்த யுகத்தை மக்கள் மீண்டும் விரும்புவார்களா? நாடு தற்போது சுதந்திரமடைந்துள்ளது. அந்த நாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்பது முக்கியமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply