பிரிவினைவாதிகளை அழைத்து பேசியதில் எந்த தவறும் இல்லை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர்
காஷ்மீர் பிரிவினைவாதிகளை தான் அழைத்து பேசியதில் எந்த தவறும் இல்லை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறினார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை வருகிற 25-ந் தேதி இஸ்லாமாபாத் நகரில் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித், ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களாக பேசி வந்தார்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பேசியதால் அதிருப்தியடைந்த மத்திய அரசு பாகிஸ்தானுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
இந்த நிலையில் அப்துல் பாசித் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மரபை மீறவில்லை
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசுவது கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனவே இதில் நான் எந்த மரபு வழிமுறையையும் மீறவில்லை. இதில் எந்த தவறும் இல்லை.
ஏனெனில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களுடைய கருத்து என்ன என்பதையும் நாங்கள் அறியவேண்டியது அவசியம். அப்போதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இயலும்.
அதிருப்தி இல்லை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு எந்த அதிருப்தியையோ, தன்னம்பிக்கை குறைவையோ அளிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இரு தரப்பு எல்லைக்குள்ளும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று கருதுகிறோம். எங்களால் முடிந்த வரை இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இப்பிரச்சினையில் இக்கட்டான நிலைமை இருப்பதை பாகிஸ்தானும் புரிந்து கொண்டுள்ளது. எனினும், பிரச்சினைக்கு தீர்வு காணும் வழியில் இருந்து நாங்கள் திசைதிரும்பமாட்டோம்.
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண ஒருவர் மீது ஒருவர் சார்ந்த பேச்சுவார்த்தை நிச்சயம் உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால் அதில் தொடர்புடைய அனைவரையும் அழைத்து பேசுவது முக்கியமாக அமைகிறது. அப்போதுதான் பிரச்சினையின் அடிப்படைத் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவும் நடத்தலாம்
யாருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பதை பாகிஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்று இந்தியா கூறியது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த விஷயத்தில், எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுடன் நாங்கள் அமைதி வழி பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். நாங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது போலவே பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எங்கள் நாட்டு மக்களிடமும் கேட்டறியலாம். ஏனென்றால், இந்தியா உடனான பேச்சுவார்த்தையின் மீது நாங்கள் மிகுந்த பற்று கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply