பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
இலங்கைக்கான மூன்று நாள் விஜய த்தினை மேற்கொள்ள வுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துக் கலந்துரையாடுவாரென கொழும்பு உயர் மறை மாவட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் கத்தோலிக்கத் திருச் சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 2015 ஜனவரி 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசர். அங்கிருந்து கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயரில்லத்தைச் சென்றடைவதுடன் அங்கு கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் விசேட கலந்து ரையாடலில் ஈடுபடுவார். அதனையடுத்து அங்கு மதிய போசனத்திலும் பங்கேற்பார்.
அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்கவுள்ள பரிசுத்த பாப்பரசர் ஏனைய மதப் பெரியார்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஜனவரி 14 ஆம் திகதி காலை கொழும்பு காலி முகத்திடலில் ஒழுங்கு செய்யப்படும் திறந்தவெளி மத வழிபாட்டு ஆராதனை நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர். அன்றைய தினம் மாலை மடு திருப்பதியில் விசேட திருப்பலி ஆராதனையையும் நிறைவேற்றவுள்ளார்.
மடுத்திருப்பதியில் மடு மாத திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர் வழங்கவுள்ளார் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply