நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை ஜப்பான் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) ஜப்பான் செல்கிறார். அவர் முதலில் அங்குள்ள க்யோட்டோ நகருக்கு சென்று தங்குகிறார். பின்னர் டோக்கியோ நகருக்கு செல்கிறார். ஜப்பான் பயணம் செல்ல இருப்பதைத் தொடர்ந்து நரேந்திர மோடி, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் முதல்முறையாக ஜப்பான் மொழியில் அந்நாட்டு மக்களுடன் பேசியிருக்கிறார். இதற்காக ஜப்பானிய ஆர்வலர்கள் குழு ஒன்று அவருக்கு மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டது. பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:-

துணை கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளில் ஜப்பான் தான் எனது முதல் நட்புறவான நாடு. ஜூலை மாதமே ஜப்பான் வருவதாக இருந்தேன். ஆனால் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றதால் அப்போது என்னால் வரமுடியவில்லை. இந்த ஜப்பான் பயணம் அந்நாட்டுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று கருதுகிறேன். பல்வேறு துறைகளிலும் இருநாட்டு உறவுகள் மேம்படுத்தப்படும்.

ஜப்பானின் மாணவர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக கலந்துரையாட இருக்கிறேன். குறிப்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன். அவரது தலைமைக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். கடந்தகால சந்திப்புகளின்போது அவர் என்னிடம் காட்டிய நல்ல நட்புறவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவுடனான ஜப்பானின் நட்புறவு என்பது காலத்துக்கு உகந்தது. இந்தியாவும், ஜப்பானும் உலக அமைதிக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் பாடுபடக்கூடிய இரு பெரிய ஜனநாயக நாடுகள். முன்பு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தசமயத்தில் ஜப்பானுக்கு வந்தபோது என் மீது காட்டிய அன்பு இன்னும் என் மனதில் நினைவாக இருக்கிறது.

ஜப்பான் மக்களின் புதிய கண்டுபிடிப்புகள், நுட்பத்திறன் ஆகியவை போற்றத்தக்கது. இரு நாடுகளும் ஒருவரிடம் இருந்து ஒருவர் அதிகம் கற்க வேண்டியுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply