இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது: இலங்கை மந்திரி
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கொழும்பில் சமீபத்தில் இலங்கை ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசுகையில், புதிய யோசனை ஒன்றை தெரிவித்தார்.
மன்னார் வளைகுடாவில் இந்திய பகுதியில் மீன்வளம் குறைந்து விட்டதால், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்த மூன்றாண்டு காலத்தில் மன்னார் வளைகுடாவின் இந்திய பகுதியில் மீன்வளம் பெருகிவிடும் என்றும் கூறினார். இது தொடர்பாக இரு நாடுகளும் அமர்ந்து பேசி இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மன்னார் மீனவர்கள் பேரவையின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறைகளில் மீன் பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பேரவையின் தலைவர் ஜஸ்டின் ஜோய்சா தெரிவித்தார்.
சுப்பிரமணிய சாமி தெரிவித்த யோசனையை இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னாவும் இப்போது நிராகரித்து உள்ளார். இதுபோன்ற யோசனையை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை என்றும், இந்த பிரச்சினையில் யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் கூறியதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் இலங்கை மந்திரி இவ்வாறு கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply