கினியாவின் அண்டை நாடான செனேகலிலும் எபோலா நோய் தாக்கம் கண்டுபிடிப்பு
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்று நோய் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் கிடுகிடுவெனப் பரவியது. இதுவரை 1550 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த நோயானது கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக உலக சுகாதாரக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நோயினை எதிர்த்து போராடி வரும் எல்லையில்லா மருத்துவர் அமைப்பிற்கு உள்ளூர் அரசாங்கங்கள் செய்துவரும் உதவிகள் போதுமானதாக இல்லாததால் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலிடம் உதவி கேட்கும் அளவுக்கு இதன் நிலைமை தீவிரம் அடைந்துள்ளது.
கினியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பலியான உயிர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இன்னும் 3000க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த்தாக்கத்திற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர்.
நைஜீரியாவிலும் பரவிய இந்த நோய்க்கு அங்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செனேகலின் தலைநகரான டகரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய கினியா மாணவனுக்கு எபோலா நோய்த்தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் தன்னுடைய நாட்டில் எபோலா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததை மறைத்துள்ளான். குணமடையும் வாய்ப்பு இவனுக்கு அதிகரித்துக் காணப்படும்போதும் ஜனநெருக்கடி மிகுந்த தலைநகரில் உண்மையை மறைத்து பல வாரங்களாக இவன் தங்கியிருந்துள்ளதால் அவனுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரின் விபரங்களையும் சேகரிக்க முயற்சிகள் நடைபெறுவதாக செனேகலின் சுகாதாரத்துறை அமைச்சர் அவா மேரி கொல் செக் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply