மதுபானங்களின் விலையை உயர்த்தியிருப்பது ஏன் : கலைஞர்
கேள்வி :- தமிழக அரசு திடீரென்று மதுபானங்களின் விலையை உயர்த்தியிருப்பதற்கான காரணம்தான் என்ன? கலைஞர் :- அதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழகச் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மானியக் கொள்கை விளக்கக் குறிப்பின் பக்கம் 29இல் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசு ஈட்டிய வருவாய் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. அதன்படி, 2005-2006ஆம் ஆண்டில் மொத்தம் 6,030.77 கோடி ரூபாய். 2006-2007ஆம் ஆண்டில் மொத்தம் 7,473.61 கோடி ரூபாய். 2007-2008ஆம் ஆண்டில் மொத்தம் 8,821.16 கோடி ரூபாய். 2010-2011ஆம் ஆண்டில் மொத்தம் 14,965.42 கோடி ரூபாய். 2011-2012ஆம் ஆண்டில் மொத்தம் 18,081.16 கோடி ரூபாய். 2012-2013ஆம் ஆண்டில் மொத்தம் 21,680.67 கோடி ரூபாய்.
இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து ஆண்டுக் காண்டு இந்தத் தொகை இரண்டாயிரம் கோடி ரூபாய்
என்றும், மூவாயிரம் கோடி ரூபாய் என்றும் உயர்ந்து கொண்டே வந்திருப்பதைக் காணலாம். ஆனால் இந்த ஆட்சியினர் தந்துள்ள புள்ளி விவரப்படியே, 2013-14ஆம் ஆண்டில் மொத்தம் 21,641.14 கோடி ரூபாய் அளவுக்குத்தான் கிடைத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைக் (2012-2013) காட்டிலும் 39.53 கோடி ரூபாய் குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாய் கூடுதலாக மதுபான விற்பனை மூலம் அரசு வருவாய் ஈட்டியதற்கு மாறாக, இந்த ஆட்சியில் கடந்த ஆண்டு கிடைத்த அளவுக்குக்கூட வருவாய் கிட்டவில்லை. மதுபானங்களின் விலையை உயர்த்தியதற்கு இது ஒரு காரணம்.
மதுபான விற்பனையை “டாஸ்மாக்” நிர்வாகம் 2003ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. இதில்
6,800 கடைகள் மூலம் மாதந்தோறும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மதுபானப் பெட்டிகள்
விற்கப்படுகின்றன. அதன் வாயிலாகத்தான் கடந்த நிதியாண்டில் 21,641 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 11 மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து, மது பாட்டில்கள் கொள்முதல்
செய்யப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம் 40 லட்சத்து 72 ஆயிரத்து 125 மதுபான பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 900 பெட்டிகள், அதாவது மொத்தக் கொள்முதலில் 23 சதவிகிதம் அளவுக்கு ஒரே ஒரு நிறுவனத்திட மிருந்து கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது.
அது எந்த நிறுவனம் தெரியுமா? முதலமைச்சர் ஜெயலலிதா வின் உடன்பிறவா சகோதரியும், அவர் வீட்டிலேயே தங்கியிருப்பவருமான சசிகலாவின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமான “மிடாஸ்” நிறுவனம்தான் டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலில் 23 சதவிகித அளவுக்குச் செய்கிறது. மீதியுள்ள 10 மதுபான நிறுவனங்களும் எஞ்சிய 77 சதவிகித கொள்முதலைப் பங்கிட்டுக் கொள்கின்றன.
ஏன் இந்தப் பாரபட்சம்? ஏன் ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் இப்படி அளவுக்கு மீறிய ஆதரவு? இந்த “மிடாஸ்” நிறுவனத்திடமிருந்து கடந்த ஜூன் மாதம் 9 லட்சத்து 39 ஆயிரம் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டன என்றால், அதற்கு அடுத்த ஜூலை மாதத்தில், அதே நிறுவனத்திடமிருந்து 10 லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு லட்சம் பெட்டிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. எனவே மதுபானங்களின் விலையை அரசு உயர்த்து வதால் அதிக இலாபம் அதாவது வருவாய் அடையக் கூடியவர்கள் யார் என்று தெரிகிறதா?
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்போதெல்லாம், அந்த அறிவிப்பு வெளி
வருவதற்கு முன்பாகவே அதனைக் கண்டிக்கும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வெளிவந்து விடும். ஆனால் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதைப் போல, ஜெயலலிதா அரசு கடந்த 20ஆம் தேதி மதுபானங்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியிருக்கிறது.
அதாவது சாதா ரகத்தைச் சேர்ந்த மது குவார்ட்டர் பாட்டில் இந்த 19ஆம் தேதி வரை 70 ரூபாய்க்கு
டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்டது. மதுபானக் கம்பெனிகளிடமிருந்து இந்தக் குவார்ட்டர் பாட்டிலை அரசு வாங்கும்போது, அதன் அடக்க விலை வெறும் 37 ரூபாய் 42 காசுதான். அதைத்தான் 70 ரூபாய்க்கு விற்றார்கள். அரசுக்கு ஒரு குவார்ட்டர் பாட்டில் மூலம் கிடைத்தது 32 ரூபாய் 58 காசு.
தற்போது அந்தக் குவார்ட்டருக்கு மேற்கொண்டு 10 ரூபாய் உயர்த்தப் பட்டிருப்பதால், இனி அரசுக்கு
ஒரு குவார்ட்டர் பாட்டில் மூலம் 42 ரூபாய் 58 காசு கிடைக்கும். இவ்வாறு நடுத்தரம், உயர் தரம் ஆகிய எல்லா சரக்குகளி லிருந்தும் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக தமிழக அரசுக்கு 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கு மென்று இந்த அரசு எதிர்பார்த்துத்தான் இந்த விலை உயர்வைச் செய்துள்ளது. திடீரென்று இந்த அரசு இந்த அளவுக்கு விலை உயர்வை ஏன் செய்துள்ளது?
கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை. 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தத் துறை மூலமாக வருவாய் கிடைக்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக கடந்த ஆண்டைவிட 40 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் குறைந்து விட்டது. வருவாய் அந்த அளவுக்குக் கிடைக்குமென்று நம்பி, இலவசங்களை ஏராளமாக வழங்குவதாக அறிவித்து, அந்தப் பொருள்க ளையெல்லாம் வாங்கிய வகையில் 600 கோடி ரூபாய் தற்போது நிலுவை உள்ளதாம்.அதை யெல்லாம் சமாளிப்பதற்காகத்தான் திடீரென்று இந்த மதுபான விலை உயர்வாம்!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply