இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்
முதல் 2 நாட்கள் ஜப்பானின் பழைய தலைநகரான கியோட்டோவில் அவர் தங்கி இருந்தார். முதல் நாளில், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரை கியோட்டோ போன்று நவீன நகராக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2-வது நாளான நேற்று முன்தினம் நரேந்திர மோடி, கியோட்டோ நகரில் உள்ள டோஜி புத்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். கியோட்டோ பல்கலைக்கழகத்துக்கும் சென்றார். பின்னர் அங்கிருந்து தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் ஆனார்.
சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பரஸ்பர பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது, சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், சென்னை-பெங்களூர் சரக்கு போக்குவரத்து சாலை திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வகை செய்யும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.
இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், நவீன நகரங்களை அமைத்தல், போக்குவரத்து, கங்கை உள்ளிட்ட நதிகளை சீரமைப்பது, மாசற்ற எரிசக்தி, திறன்அபிவிருத்தி, உணவு பதப்படுத்துதல், கிராமப்புற மேம்பாடு, ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குதல், மகளிர் மேம்பாடு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
போக்குவரத்து மேம்பாடு தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் விடுவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை ஜப்பான் வழங்கும்.
சிவில் அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை. இந்த துறையில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்குமாறு தங்கள் அதிகாரிகளை ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
மேலும் கடலோர பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நவீன விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
பேச்சுவார்த்தை முடிந்ததும், கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அணுஆயுத பரவல் தடை மற்றும் அணுசக்தி பாதுகாப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பின்னர் இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
என்னுடைய இந்த சுற்றுப்பயணம் இந்தியா-ஜப்பான் இடையேயான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு எல்லை என்பது கிடையாது. தெற்கு ஆசியாவுக்கு வெளியே நான் முதன் முதலாக ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளேன். இதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் எனது தலைமையில் ஆட்சி அமைந்த 100 நாட்களில் நான் ஜப்பான் வந்திருப்பது, உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவும், ஜப்பானும் நீண்டகால நண்பர்கள். என்னுடைய இந்த பயணம் இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் ஆசியாவில் பொருளாதார வளம் மிக்க 3 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பதை உறுதிப்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒத்துழைத்து செயல்படுவது அவசியம் ஆகும். இந்தியாவின் முன்னேற்றத்தில் ஜப்பானுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜப்பானின் முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். புல்லட் ரெயில் திட்டத்துக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியாவின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க ஒப்புதல் அளித்ததற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானின் முதலீடு இரு மடங்காக உயரும். அதாவது ரூ.2 லட்சத்து 10 கோடி அளவுக்கு ஜப்பான் முதலீடு செய்யும். வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவில் புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும் என்று நரேந்திர மோடியிடம் உறுதி அளித்து இருக்கிறேன்.
சிவில் அணுசக்தி துறை ஒத்துழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு ஷின்ஜோ அபே கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply