நித்யானந்தாவின் மனு தள்ளுபடி: ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், நித்யானந்தாவின் பெண் சீடராக இருந்த ஆர்த்தி ராவ் என்பவர், அங்கிருந்து வெளியேறி, பிடதி போலீசில் நித்யானந்தாவுக்கு எதிராக, பாலியல் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் கைதான நித்யானந்தா ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு ராம் நகர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு, ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த மாதம்5ம் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் 16-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ‘கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்’ என, அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது, நீதிபதிகள், ‘ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா தயங்குவது ஏன்? பரிசோதனைக்கு ஆட்பட நித்யானந்தா மறுப்பதால், பல்வேறு விதமான யூகங்கள் வெளிவரலாம்’ என்றனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்த போது, நித்யானந்தா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நித்யானந்தாவின் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஆண்மை பரிசோதனைக்கு தடை விதிக்க கோரிய நித்யானந்தாவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply