நவாஸ் ஷெரிப் பதவி விலகும்வரை பாராளுமன்ற முற்றுகை தொடரும்: இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவந்த இரு தலைவர்களும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி, இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் தொண்டர்களுடன் ஷெரிப் வீட்டை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டும் போலீசார் விரட்டியடித்தனர். இதில் 8 பேர் பலியானதாகவும், போலீசாரின் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் மற்றும் தாஹிருல் காத்ரி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய செய்தி பரவத் தொடங்கியதும், கராச்சி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த இரு கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பிரதமர் நவாஸ் ஷெரிப் வீட்டை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த சேனலின் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது. போராட்டக்காரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தெஹ்ரிக் இ இன்ஸாப் தலைவர் இம்ரான் கான், ‘இதைப் போன்ற ஆவேசச் செயல்கள் அமைதி வழியிலான நமது 19 நாள் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கி விடும் என்று தொண்டர்களை அவர் எச்சரித்துள்ளார்.
நாளுக்குநாள் மோசமடைந்துவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் நவாஸ் ஷெரீப், குறிப்பிட்ட சிலரால் அரசியலமைப்பு சட்டம் பாதிக்கப்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டங்களுக்கு அஞ்சி பதவி விலகப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
போராட்டத்தை கைவிடுமாறு இம்ரான் கான், தாஹிருல் காத்ரி ஆகியோரை நேரில் சந்தித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து, பாகிஸ்தானின் வலதுசாரி இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் சிராஜுல் ஹக் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த புதன்கிழமை இம்ரான் கான் மற்றும் காத்ரியை தனித்தனியாக சந்தித்து சமரசப் பேச்சு நடத்தினர்.
அவர்களது போராட்டத்துக்கான காரணங்களுக்கான தீர்வினை பாராளுமன்றம் ஏற்படுத்தி தருவோம் என்று இந்த குழு வாக்குறுதி அளித்ததாகவும், அதனை இம்ரான் கான் முழுமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் இஸ்லாமாபாத்தில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த சமரசப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டமாக வியக்கத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், கடந்த 24 நாட்களாக பாராளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்திவரும் இம்ரான் கான் நேற்று தொண்டர்களிடையே பேசினார்.
‘நவாஸ் ஷெரிப் பதவி விலகும் வரை பாராளுமன்ற முற்றுகை போராட்டம் தொடரும். இதே கொள்கையுடன் என்னோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டார்.
இம்ரான் கானின் போராட்ட முகாமுக்கு மிக அருகாமையில் தாஹிர் உல் காத்ரி தலைமையிலான தொண்டர்களும் முகாம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply