பெங்களூருக்கு அருகே உள்ள ஆசிரமம் திருவண்ணாமலைக்கு மாற்றம்: நித்யானந்தா முடிவு

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண்மை பரிசோதனை 5½ மணி நேரம் செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிந்து நித்யானந்தா தனது தியான பீடத்திற்கு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க சென்றனர்.

தியான பீடத்தின் முன் பகுதியில் தொலைக்காட்சி ஊடக பிரதிநிதிகள் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாக கூறி அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சில கன்னட அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

நித்யானந்தா இணையதள டி.வி.யில் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதேபோல் அவர் நேற்று இணையதள தொலைக்காட்சியில் தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.

அந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply