உலக தற்கொலை தடுப்பு தினம்: தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தவர்களின் பேட்டி

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தற்கொலை தடுப்பு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனித சங்கிலியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தற்கொலைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தவர்கள் உருக்கமாக பேசினார்கள்.

சென்னை மைலாப்பூரை சேர்ந்த ஜகதீஸ்வரி (வயது 30) என்ற பெண் கூறுகையில், “கடந்த 2006-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக மன விரக்தி அடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். வீட்டிலிருந்த ‘ஆசிட்’டை எடுத்து குடித்தேன். ஆசிட் குடித்த அடுத்த சில நொடிகளில் நெருப்பை விழுங்கியது போல வலியால் துடித்தேன். அன்றிலிருந்து பல மாதங்கள் எச்சில் கூட விழுங்க முடியாமல் நரக வேதனை அனுபவித்தேன். எனது ஒரு நொடி முட்டாள் தனமான முடிவுக்காக, இன்று வரை என்னை நானே நொந்துகொண்டு இருக்கிறேன். என்னைப்போல யாரும் இனி தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது. கனவிலும் கூட தற்கொலை எண்ணம் வர வேண்டாம். முடிந்தவரை கஷ்டம் ஏற்படும் நேரங்களில் தனிமையை தேடாதீர்கள். அதுவே தற்கொலை செய்ய தூண்டும் காரணியாய் அமைந்துவிடும்” என்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் (32) என்பவர் கூறுகையில், “தற்கொலை முடிவு மிகவும் முட்டாள் தனமானது. 1999-ம் ஆண்டு நான் தற்கொலைக்கு முயன்றேன். அந்த வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. விலை மதிப்பில்லாத உயிரை அற்பத்தனமான விஷயத்துக்காக விடுவது என்பது மடத்தனமாகும். இனி யாரும் இதுபோல் ஈடுபட வேண்டாம்” என்றார்.

அதேபோல சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கூறும்போது, ‘‘நான் எனது நண்பர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது காப்பாற்றினேன். அவருக்கு தகுந்த அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் நலமாக இருக்கிறார். தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்னர் தங்களின் குடும்பங்களை ஒரு நொடி நினைத்துப்பார்த்தால் அந்த எண்ணமே நமக்கு தோன்றாது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply