இலங்கையில் தெற்கு தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு : ஜெனரல் ஜகத் ஜயசூரிய 

தெற்கு தென்கிழக்காசிய வலயத்தில் சமாதானம் மட்டும் ஸ்திரத் தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் “தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் South and Southeast Asian Nation (SASEAN) மாநாடு” ஒன்றை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக நடத்தப்படவுள்ள இம்மாநாட்டுக்கு சீனா,ரஷ்யா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த உயர்மட்ட கலந்துரையாடலுடனான மாநாடு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி முதல் 29ம் வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முழுமையான ஒத்துழைப்புடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தினால் முதற் தடவையாக இந்த மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறவுள்ள மேற்படி சர்வதேச மாநாடு தொடர்பான உத்தியோக பூர்வ இணையத்தளம் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் நேற்று அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் விளக்கமளிக்கையில்,

நாடொன்றின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் இல்லாத பட்சத்திலேயே பொருளாதாரத்துறையும் வளர்ச்சியடையும். அத்துடன் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது.

ஒவ்வொரு நாட்டினதும் பாதுகாப்பு துறையில் உயர் பதவியை வகிக்கும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிகளை ஒன்றிணைத்து பரஸ்பர புரிந்துணர்வு ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடனே இது போன்ற உயர்மட்ட மாநாட்டை நடத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற்றுக்கொண்டேன்.

இதற்கமைய தெற்காசியாவிலுள்ள 8 நாடுகள், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 10 நாடுகள் என 18 நாடுகளை உள்ளடக்கும் வகையில்  (SASEAN) “சாசியன்” என்று பெயர் வைத்து மாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக பலமான நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பார்வையாளர் அந்தஸ்தை வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அங்குரார்ப்பண வைபவம் இலங்கையில் நடாத்தப்படவுள்ளமை எமது தாய் நாட்டிற்கு சிறந்த நற்பெயரை மேலும் ஏற்படுத்தும். அத்துடன் நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பிலும் இந்த மாநாட்டின்போது இரு தரப்பு சந்திப்புகளை நடாத்தி கலந்துரையாட முடியும் என்றார்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின்  (SASEAN) பங்கேற்பு சார்க் நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு (ASEAN)அங்கத்துவ நாடுகள் வரை விஸ்தரிக்கப்படுகின்றது. ரஷ்யா மற்றும் சீன குடியரசும் இதில் மேற்பார்வை யாளர்களாக பங்குபெறுவர்.

இலங்கையில் நடைபெறும் ஆரம்ப அமர்வில் தீர்மானிக்கப்படுவதற்கு அமைய குறிப்பிட்ட அமர்வு  (SASEAN) அங்கத்துவ நாடுகளின் பங்களிப்புடன் அந்தந்த நாடுகளில் நடாத்தப்படவுள்ளது.  (SASEAN) பாதுகாப்பு பிரதானிகளின் அமர்வை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்துடன் இணைந்து செயலாளர் நாயகம் அலுவலகம் ஒன்றும் நிறுவப்படுவதோடு, அதன் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் ஆரம்ப அமர்வின்போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply