ஜெயலலிதாவுக்கு எந்த பந்தயத்திலும் ஜெயிக்கத் தெரியும்: தூத்துக்குடியில் சரத்குமார் பிரசாரம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேஸியை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று தூத்துக்குடி மாநகர பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். காலையில் அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், தோப்புத்தெரு, வள்ளிநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அங்கு திரண்டு இருந்த மக்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேஸிக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறி உள்ளது. தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலின் போது, முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க.வுக்கு, 37 தொகுதிகளில் வெற்றியை கொடுத்து உள்ளீர்கள்.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு முடிவெடுத்து முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். ஏழை- எளிய மக்களுக்கு தரமான அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று உழைப்பவர் ஜெயலலிதா. இந்த தேர்தலில் எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்வது உங்கள் கடமை. மக்கள் பேராதரவு பெற்றவர் ஜெயலலிதா. உங்களுடைய தேவைகளை புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 10 அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. தரமான சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
சாலைப்பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் போது, தூத்துக்குடி சென்னைக்கு நிகராக மாறும். ரூ.282 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் நிறைவேறும் போது, தூத்துக்குடி தண்ணீர் பிரச்சினை இல்லாத மாநகரமாக மாறும். மீனவ மக்களின் பாதுகாவலராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் மகத்தான வெற்றி பெறுவோம். ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்பான மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றி வந்த அந்தோணி கிரேஸி மேயர் வேட்பாளராக உள்ளார். சாதாரண தொண்டருக்கும் பதவி வழங்குபவர் ஜெயலலிதா.
உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி தேர்தல் தான் பொதுத்தேர்தலுக்கு அடித்தளம். ஆகையால் நாம் முக்கியமான தேர்தலில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த தேர்தலில் எதிர்த்து நிற்பவர்கள் பற்றி பேசவில்லை. அவர்கள் யாருக்கும் எதிர்க்கும் திராணி இல்லை.
முதல்-அமைச்சர், பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது என்று கூறினார். பா.ஜனதா கட்சி தலைவர் ஒருவர் அவதூறாக பேசுவதை, அந்த கட்சி கண்டிக்கவில்லை. பிரதமர் வெளிநாட்டுக்குதான் சென்று கொண்டு இருக்கிறார். உள்நாட்டில் நடப்பதை கவனிக்கவில்லை.
முத்துநகருக்கு முத்து முத்தான திட்டங்களை முதல்-அமைச்சர் தந்து உள்ளார். அவர் எந்த சோதனையையும் கடந்து செல்லும் தலைவர். நல்ல தலைவர்களை பாராட்டியாக வேண்டும். சோலைவனம் என்றால் அதில் மலர்கள் மலர்ந்து இருக்கும். மலரை எப்படி மலர வைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். பாலைவனமாக இருந்தால் எப்படி கடக்க வேண்டும் என்று முதல்- அமைச்சருக்கு தெரியும். ஏழைகளின் கண்ணீரை துடைக்க தெரியும். எந்த பந்தயத்திலும் ஜெயிக்க தெரிந்து இருக்க வேண்டும். முதல்-அமைச்சருக்கு அதுவும் நன்றாக தெரியும்.
மாநகராட்சி மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள அந்தோணி கிரேஸிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply