எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா? மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

“எனக்கும், கருணாநிதிக்கும் மோதலா?” என்பதற்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பதில் அளித்துள்ளார். தி.மு.க. முப்பெரும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தகராறா? பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க பலர் சூழ்ச்சி வலை பின்னினார்கள். ஆனால், வலை பின்னியவர்கள்தான் அதில் சிக்கி அழிந்துபோனார்கள். அப்போது சிலர் சம்பத்தை பிரித்து தனி கூடாரம் அமைத்தார்கள். அதனால் தி.மு.க. அழிந்துபோய்விடவில்லை. அதன்பிறகு கலைஞரிடம் இருந்து நாவலரையும், எம்.ஜி.ஆரையும் பிரித்தார்கள். அப்போதும் தி.மு.க. அழிந்துவிடவில்லை. அதன்பிறகு வைகோவை பிரித்தார்கள். அப்போதும் அழிந்துபோய்விடவில்லை. என்றைக்கும் தி.மு.க. கம்பீரமாக நிற்பதற்கு தலைவர் கலைஞர்தான் காரணம்.

சில பத்திரிகைகள் தொடர்ந்து இந்த இயக்கத்தை களங்கப்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. எனக்கும், கலைஞருக்கும் இடையே தகராறு என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். கலைஞரை விட்டால் நான் இல்லை, நீங்கள் இல்லை, பத்திரிகைகள்கூட இல்லை. இந்த விஷயத்தில் பண்பாட்டின் காரணமாக கலைஞர் அலட்சியம் காட்டினார். நானும் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினேன். ஆனால், அதன்பிறகும் தவறாக எழுதுகிறார்கள்.

நூற்றாண்டு விழா

நான் தி.மு.க.வுக்கும், தலைவர் கலைஞருக்கும் உழைக்க விரும்புகிறேன். வேறு எதுவும் இல்லை. கலைஞர் உழைப்பை அனைவரும் அறிவர். அவர் கற்றுத்தந்த வழியை பின்பற்றி, உழைக்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. ஒரு பத்திரிகைக்கு அவர் பேட்டி அளிக்கும்போது, மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது அவரது உழைப்பு என்றார். இதைவிட நான் வேறு எதையாவது விரும்புவேனா?. நமக்கு என்றைக்கும் தலைவர் கலைஞர்தான்.

2016-ம் ஆண்டு தி.மு.க. நூற்றாண்டு விழா வருவதை துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டார். அப்போது கலைஞர்தான் முதல்-அமைச்சராக இருந்து, தி.மு.க. நூற்றாண்டு விழாவை நடத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். 2016-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply