“அரசியலை ஜனநாயக மயமாக்குவோம், ஜனநாயகத்தை மக்கள் மயமாக்குவோம்.”
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடருந்த அனைத்து ஆயுதங்களையும் மார். 7ம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வைபவம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கட்சியின் செயலாளர் கைலேஸ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆயுதக் கையளிப்பின் போது முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆற்றிய உரை;
கிழக்கிலங்கையின் வரலாற்றில் மட்டும் அல்ல முழு இலங்கை வரலாற்றிலுமே சிறப்புப் பெறப்போகின்ற ஒரு முக்கிய தினத்தில் இன்று நாம் நிற்கின்றோம். 1983 ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட பாரிய இனக்கலவரம் எமது மாகாண இளைஞர்களை வன்முறைமீது நம்பிக்கை கொள்ளச் செய்தது. மட்டக்களப்பு கச்சேரியில் அரசு பாதுகாப்பாக சேர்த்து வைத்திருந்த ஆயுதக் கிடங்கை உடைத்து சூறையாடிய எமது இளைஞர்கள் அன்று தூக்கிய துப்பாக்கிகளுக்கு இன்றிலிருந்து நிரந்தரமான ஓய்வு வழங்கப்படுகின்றது. சுமார் 26 வருடங்களாக ஆயுதக் கலாச்சாரத்திலும், வன்முறைச் சூழலிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாகும்.
2004 ஆம் ஆண்டு இதே மார்ச் மாத முதல் வாரத்தில் தமிழ் ஈழவிடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த நாம் 6000 போராளிகளுடன் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினோம். ஆனாலும் புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து எம்மையும் எமது மக்களையும் பாதுகாக்க நாம் மீண்டும் ஆயுதங்களைக் கையில் எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்க தள்ளப்பட்டோம். ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறு கையில் சமாதான புறாவுடனும் நாம் அரசியல் நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம்.
ஆனால் ஜனநாயக வழிகளில் நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை நாங்கள் இழந்துவிடவில்லை. எமது மக்களில் நம்பிக்கை வைத்து தேர்தல்களைச் சந்தித்தோம். எமது ஜனநாயக வரவிற்கும் புதிய அரசியற் சிந்தனைகளுக்கும் பாரிய ஆதரவு தந்து எமது மக்கள் எங்களை ஆட்சிபீடத்தில் இருத்தினர்.
இன்று எமது மாகாணம் பயங்கரவாதிகளிடம் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது. முழு இலங்கையில் இருந்தும் கூட பயங்கரவாதிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தை கிழக்கு மாகாணத்தவர்களே ஆள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் 13 வது சட்டத் திருத்தத்தினூடான சகல அதிகாரங்களும் கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படும் எனும் நம்பிக்கை எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஓர் இலங்கையை கட்டியெழுப்பவும் எமது தாய் நாடான இலங்கை தேசத்தின் இறைமை பாதுகாக்கவும் இன்று நாம் எமது ஆயுதங்களைக் கீழே வைத்து பூரணமான ஜனநாயக நீரோட்டத்தில் இணைகின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இன்றுடன் எமது ஆயுதப் பிரிவை முழுமையாகக் கலைக்கின்றோம். இதன் மூலம் அரசியலை ஜனநாயக மயமாக்கவும், ஜனநாயகத்தை மக்கள் மயமாக்கவும் நம்பிக்கையுடன் உறுதி பூணுகின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply