ரி.எம்.வி.பி ஆயுதக் கையளிப்பு முழுமையானதல்ல : கருணா அம்மான்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த வாரம் தம்மிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதைக் கொண்டு அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இல்லையென்ற முடிவுக்கு வரவும் முடியாது. அவ்வாறான ஒரு முடிவை யாராவது எடுத்தால் அது ஒரு முட்டாள்தனமான முடிவாகவே இருக்குமெனப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று தெரிவிததார்.
இன்று காலையில் அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு:
கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களைக் கடந்த வாரம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதே?
பதில்: இல்லை. முழுமையாக அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் என்பதனை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். ஒரு கைத்துப்பாக்கியைக் கூட அவர்கள் ஒப்படைக்கவில்லையே. அந்தக் கைத்துப்பாக்கிகளை வைத்துக் கொண்டுதான் இன்று வரை அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கப்பம் பெறுவதிலும் கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களிம் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கிழக்கு மாகாண பொலிஸ் பதிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் இன்று நீங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளனவே?
பதில்: ஆம்,; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 2500 பேருடன் இன்று இணையத்தான் உள்ளோம். அவ்வாறு நாம் இணைந்த பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தரப்பில் நால்வரே மிஞ்சப் போகின்றனர்.
கேள்வி: யார் அவர்கள்?
பதில்: முதலமைச்சர் பிள்ளையான், பிரதீப் மாஸ்டர், சிவகீதா பிரபாகரன் (மட்டு மேயர்) ஆஸாத் மௌலானா ஆகியோரே.
கேள்வி: உங்களுக்கு அமைச்சுப் பொறுப்பு?
பதில்: கிடைக்கும்.
கேள்வி: நீங்கள் உங்களிடமுள்ள ஆயுதங்களை எப்போது ஒப்படைப்பீர்கள்?
பதில்: எங்களிடம் ஆயுதங்களா? அப்படி யார் சொன்னார்கள்? எங்களிடம்தான் ஆயுதங்கள் இல்லையே.
கேள்வி: கிழக்கு மாகாண அபிவிருத்தி எப்படி?…
பதில்: கிழக்கு மாகாண அபிவிருத்தியா? அப்படியென்றால் என்ன? கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கம் நிறையவே உதவிகளைச் செய்து வருகிறது. ஆனால் அதனைப் பயன்படுத்தத் தெரியாத முதலமைச்சராகப் பிள்ளையான் இருப்பதுடன் அவரது ஆலோசகர்கள் கூட படிப்பறிவில்லாதவர்களாகவும் எந்த விடயத்திலும் அடிப்படை அறிவே இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களைவைத்துக் கொண்டா அபிருத்தியைச் செய்வது.. அது முடியுமான காரியமா?
கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர் கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியில் எவ்வாறு அக்கறையுடன்;; செயற்பட்டு வருகிறாh.; அந்தப் பிரதேசங்களில் துரிதமான அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதனை பிள்ளையான் முதலில் பார்க்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அரசியல் தெரிந்தவர், எதனை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதில் பரீட்சயமுள்ளவர். அவர்களது ஆலோசகர்களும் அப்படிப்பட்வர்களே..
கேள்வி: கிழக்கின் அபிவிருத்திக்கு மத்திய அரசு முழுமையாக உதவவில்லையென்ற குற்றச்சாட்டும் எழுகிறதே?..
பதில்: இல்லை..இல்லை.. இது வேலைக்காரிக்குப் பிள்ளைச்சாட்டு..
கேள்வி: இல்லை.. முதலமைச்சரின் சில கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லையென்று நான் கருதுகிறேன்.
புதில்: அது தவறு. பிள்ளையான்தான் அரசாங்கத்துடன் ஒத்துப் போகிறாரில்லை.. அவரின் அண்மைக் காலப் கோரிக்கைகள்.. புலிகளின் கோரிக்கைகளுக்குச் சமமானமை.. அதனை அரசினால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?
கேள்வி: காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு மாகாணத்துக்குக் கிடைப்பதற்கு நீங்கள்தான் தடையாக இருக்கிறீர்களே?
பதில்: இவை இரண்டும்தான் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அவசரத் தேவையென நீங்கள் நினைக்கிறீர்களா? இவை இரண்டும் கிடைத்தால் பிரச்சினைகள்தான் அதிகரிக்கும்..காணி அதிகாரமென்பது நாம் நினைப்பது போன்று பெரிய விடயமல்லவே.. அது காலப்போக்கில் சரியாகி விடும். ஆனால் பொலிஸ் அதிகாரம் தேவையற்றதொன்று.. அது வழங்கப்பட்டால் சிங்கள சமூகம் எம்மைத் தவறாக நோக்கும். ஆகவே எதிர்காலத்தில் எமது சமூகத்தை யாரும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது.
பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை அண்மையில் நான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். எமது தமிழ் இளைஞர்கள் 2000 பேருக்குப் பாதுகாப்புத் துறையில் தொழில் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தேன். அது சரியாகிவிட்டால் அவர்களெல்லாம் வடக்கிலும் கிழக்கிலும்தானே கடமையாற்றுவார்கள்.
கேள்வி;: வடபகுதியில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பில் அவர்கள் நலன் கருதி யுத்த நிறுத்தமொன்றுக்கு அரசை நீங்கள் கேட்கலாமே..
பதில்: தேவையில்லை. யுத்தம் விரைவில் முடிந்து விடும். அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்புப் பகுதிகளுக்குள் மக்கள் வந்தால் பிரச்சினை ஒன்றுமில்லையே..?
கேள்வி: மக்களைச் சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்கிறார்களில்லையாமே..?
புதில்: யுத்தத்தில் புலிகள் படுதோல்வியைத் தழுவி விட்டனர். அவர்கள் இப்போது 17 கிலோ சதுர மீட்டருக்குள் குறுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றோ நாளையோ மக்களை விட்டுவிட்டு ஓடத்தான் போகிறார்கள்..
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply