ஜப்பானை கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்-விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவு கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் சின்னம் ஒன்று உருவானது. பின்னர், அது தீவிரமடைந்து கடும்புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பான்போன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மெல்ல மெல்ல ஜப்பானை நோக்கி நகர்ந்து நேற்று காலை மத்திய ஹமமட்சு நகரைத் தாக்கியது. அப்போது அப்பகுதியில் பலத்த மழையும் கொட்டியது. பல இடங்களில் 8 முதல் 20 செ.மீட்டர் மழை பெய்தது. மேலும் மணிக்கு 129 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது.
இந்த புயல் காரணமாக ஒகினாவா நகரின் கடற்பகுதியில் திடீர் கொந்தளிப்பும் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் இருந்த 3 அமெரிக்கர்களை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் ஒருவர் பலியானார். மற்ற இருவரின் கதியும் என்னவென்று தெரியவில்லை.
இந்த புயல் தலைநகர் டோக்கியோவை நெருங்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 185 கி.மீ. வேகமாக மாறலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதனால், நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடலாம் என்பதாலும், ஆங்காங்கே எரிமலை சீற்றத்தால் உருவான சாம்பல் குவியலை வெள்ளம் அடித்துக்கொண்டு சென்று பெருமளவில் சகதியை உருவாக்கலாம் என்பதாலும் கிழக்கு ஜப்பான் பகுதியில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும், ஹமமட்சு நகரில் உள்ள தங்களுடைய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியை தற்காலிகமாக ஹோண்டா, டொயோடா ஆகியவை நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டன.
ஜப்பானில் ஏற்கனவே, கடந்த வாரம் ஓன்டேக் எரிமலை வெடித்துச் சிதறியதில் 51 பேருக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் 12 பேரை காணவில்லை. இந்த பகுதியிலும் பான்போன் புயல் தாக்கியதால் காணாமல் போனவர்களை தேடும் பணியும், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியும் கடந்த 2 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
பான்போன் புயலின் தாக்கம் காரணமாக நேற்று மேற்கு டோக்கியோ நகரில் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் நகரில் அதிவேக புல்லட் ரெயில்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. திடீரென்று ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply