ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்த மாதம் 29-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை 30-ந் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, இந்த வழக்கில் ஆஜராவது குறித்து கர்நாடக அரசின் நியமன ஆணை தனக்கு கிடைக்காததால் வாதாட முடியாது என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறியதை அடுத்து விசாரணையை 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் வக்கீல்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.எச்.வகேலா பிறப்பித்த உத்தரவின் பேரில், மறுநாள் அதாவது கடந்த 1-ந் தேதி அதே நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி ரத்தினகலா, அதை ஐகோர்ட்டின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, 7-ந் தேதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்த 2 நாட்களிலும் ஜெயலலிதா சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத் மலானி ஆஜரானார்.

இந்த நிலையில், தசரா விடுமுறை முடிவடைந்து கர்நாடக ஐகோர்ட்டு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இன்று நண்பகல் வாக்கில் மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார்.

எனவே, கடந்த 10 நாட்களாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் மனு இன்று விசாரணைக்கு வருவதால் கர்நாடக ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வக்கீல்கள் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே ஐகோர்ட்டு வளாகத்திற்குள் அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மேலும் ஐகோர்ட்டு மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும், ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் அனுமதி கிடையாது.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருவதன் காரணமாக மேற்கண்ட இரு இடங்களிலும் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.

முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதையொட்டி ஏராளமான அ.தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களும் பெங்களூர் வந்து விடுதிகளிலும், ஓய்வு இல்லங்களிலும் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) அலோக்குமார் தெரிவித்தார்.

தீர்ப்பு வெளியான அன்றும், ஏற்கனவே ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்ற அன்றும் ஏற்பட்ட சூழ்நிலையை சமாளித்தது போல் இப்போதும் நிலைமையை சமாளிக்க போலீசார் தயாராக இருப்பதாகவும், ஐகோர்ட்டை சுற்றிலும் 500 போலீசாரும், பரப்பன அக்ரஹாரா சிறை பகுதியில் 1,000 போலீசாரும் நிறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக மந்திரிகள் நத்தம் விசுவநாதன், வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, மோகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமான பேர் நேற்று பரப்பன அக்ரஹாராவுக்கு வந்திருந்தனர். ஜெயலலிதாவை பார்க்க முடியாததால் அவர்கள் சிறை முன்பு சிறிது நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் சிறை முன்பு ஜெயலலிதா விடுதலைக்காக சர்வமத பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் சென்னை மதுரவாயலை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபட்டனர். பரப்பன அக்ரஹாராவில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் ஜெயலலிதா விடுதலைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் பெங்களூர் பானசவாடி பகுதியை சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 19 பேர் சிறை முன்பு அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply