ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளத் தயார் தலைவர் ரணில் விக்கிரமசிங்க

ஒரே கொள்கையில் ஒரே இலக்கு நோக்கியதொரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரளவேண்டுமெனவும் அறைகூவல் விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்று நிறைவடைந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்றது. இப் பதவிப் பிரமாண நிகழ்வில் ஊவா மாகாண எதிர் கட்சி தலைவராக ஹரீன் பெர்னாட்டோ, எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரான ஆனந்த குமார சிறி மற்றும் உறுப்பினர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமன கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஊவா மாகாணசபைத் தேர்தல் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டது. மோசடிகள் மிக்க அரசாங்கத்திற்கு படிப்பினையை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்பட்டது. இந்தத் தேர்தல் அரசாங்கம் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டாலும் அவர்களை விரைவிலேயே வீட்டுக்கு அனுப்புவதற்கான முதற்படியாக காணப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹரீன் பெர்ணான்டோ தனது பதவியை இராஜினாமச் செய்து கட்சிக்காக போட்டியிட்டிருந்தார். அதேபோன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தார்கள். மக்கள் மோசடி மிக்க ஆட்சிக்கு எதிராக தமது வாக்குகளை வழங்கியிருந்தார்கள். இத்தருணத்தில் அனைவருக்கும் எனது சார்பிலும் கட்சியின் சார்பிலும் நன்றிகளைக் கூறுக்கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரே குரலாகச் செயற்பட வேண்டும். அதன் மூலம் தேர்தல் சவால்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என ஜனநாயக் கட்சியின் தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டிருந்தார். எமது கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் ஏதுவும் கிடையாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கின்றோம். நாம் கிராம மட்டத்திலிருந்து அக்கருத்து நோக்கிய பணிகளை ஆரம்பித்திருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும் ஒரேயொரு பிராதான எதிர்ச்சக்தியாகும். ஊவா மகாண சபைத் தேர்தலில் தனிக்கட்சியாகப் போட்டியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி 40சதவீமான வாக்குகளைப் பெற்றிருந்ததன் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி ஊழல் மிக்க ஆட்சியை மாற்றியமைப்பதற்கு அரசுக்கு எதிரான அனைத்துச் சக்திகளும் எம்முடன் அணிதிரளவேண்டும். குறிப்பாக கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என அனைத்துச் சக்திகளும் ஒன்றுபடுவது அவசியமாகும். இந்நிலையில் ஒரேகொள்கையில் ஒரே இலக்குநோக்கியதொரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபட்டுச் செயற்படுதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நிறைவேற்று அதிகார முறைமை ஒழித்து 17ஆவது திருத்தச்சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படுவது அவசியமாகும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மக்கள் வெற்றி வேலைத்திட்டம் என்பது உருவாக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் கசீம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று நாடாளவிய ரீதியில் உள்ள தேர்தருக்குப் பொறுப்பான கட்சிக்கிளைத் தலைவர்களுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 24ஆம் திகதி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

தற்போது எம்மிடம் சிறந்த மக்கள் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள். அவ்வாறான நிலையில் இந்த நாட்டை மோசடிமிக்கவர்களின் பூமியாக உருவாக்குவதற்க பதிலாக மக்கள் அபிமானத்தைப் பெற்ற நாடாக மாற்றுவதுடன் மனித சமூகம் சிறப்பாக வாழக்கூடிய ஒருநாடாக உருவாக்குவதே எமது திட்டமாகும் அதனால் கட்சியின் தீர்மானத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply