கலவரம் தூண்டியதாக வழக்கு: சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் கென்யா அதிபர் ஆஜர்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2007-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், அப்போதைய அதிபரான மவாய் கிபாகியும், எதிர்க்கட்சி தலைவருமான ரைலா ஒடிங்காவும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தற்போதைய அதிபரான உஹுரு கென்யட்டா, மவாய் கிபாகிக்கு ஆதரவு அளித்தார். இந்த தேர்தலில் மவாய் கிபாகி வெற்றி பெற்றார். ஆனால் அந்த தேர்தலின்போது, கிபாகி பெருமளவு மோசடியில் ஈடுபட்டதாக ரைலா ஒடிங்கா குற்றம் சாட்டினார். அந்த தேர்தலைத் தொடர்ந்து பெருமளவில் கலவரங்கள் மூண்டன. அப்போது 1,200 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.

இந்த கலவரங்களை தூண்டி விட்டதாக தற்போதைய அதிபரான உஹுரு கென்யட்டா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது தாக்குதல்கள் நடத்திய உள்ளூர் போராட்டக் குழுவுக்கு அவர்தான் நிதி உதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது நெதர்லாந்தில் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போதைய அதிபரான உஹுரு கென்யட்டா மீது மனித குலத்துக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை, கற்பழிப்பு, நாடு கடத்தல், துன்பப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக உஹுரு கென்யட்டா நேரில் ஆஜர் ஆவதற்கு சர்வதேச கிரிமினல் கோர்ட்டு சம்மன் பிறப்பித்தது. அந்த சம்மனின் பேரில், சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக அவர் அதிபர் பதவியை தற்காலிகமாக துணை அதிபர் வில்லியம் ரூட்டோவிடம் ஒப்படைத்து விட்டு திஹேக் சென்றார்.

நேற்று அவர் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

ஒரு நாட்டின் அதிபராக இருந்து கொண்டு, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில், குற்ற வழக்கில் ஆஜரான முதல் தலைவர், உஹுரு கென்யட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையில் சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் அரசு தரப்பு தலைமை வக்கீல் பாட்டவ் பென்சவுடாவும் ஆஜர் ஆனார். அவர் அதிபர் உஹுரு கென்யட்டா சாட்சிகளை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். வழக்கு குறித்து அவர் குறிப்பிடுகையில், “வழக்கு இப்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. எனவேதான் நான் ஆஜராகி இருக்கிறேன்” என்றார்.

வழக்கு விசாரணையை நேரில் பார்ப்பதற்காக கென்யட்டா ஆதரவாளர்களும், கென்ய எம்.பி.க்களும் குவிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply